பக்கம் எண் :

சிவலோகம் திறந்தது 393

போன்ற கேள்விகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். தை மாதம் 20-
ஆம் தேதி (31-1-1876) அன்று ஆசிரியருக்குத் தேகத் தளர்ச்சி அதிகமாயிற்று.
நானும் சவேரிநாத பிள்ளையும் ஒன்றும் தோன்றாமல் சிறிது சிறிதாகப் பால்
கொடுத்து வந்தோம். இரவில் கோயிலிலிருந்து ஸ்ரீ கோமுத்தீசுவரர்
எழுந்தருளினார். நான் சுவாமி தரிசனம் செய்யப் போனபோது கோபுரவாயிலில்
சுவாமியுடன் வந்த சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்கள் நிலையைப் பற்றி
விசாரித்தார்; எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. துக்கம் பொங்கி
வந்தது. “இப்போது அவர்களால் பேச முடியவில்லை; நாம் ஏதாவது
சொன்னால் தெரிந்து கொள்ளுகிறார்கள். சிறிது சிறிதாகப் பாலைக் கொடுத்து
வருகிறோம்” என்று தடுமாறிக் கொண்டே சொன்னேன். அவர் கேட்டுச் சிறிது
மயங்கி நின்றார். “இந்த நிலையிலாவது பிள்ளையவர்கள்
ஜீவித்திருக்கிறார்களென்றால் ஆதீனத்திற்கு மிகவும் கௌரவமாக இருக்கும் ஸ்ரீ
கோமுத்தீசர் திருவருள் என்ன செய்கின்றதோ!” என்று வருந்தி விட்டு,
“போய்க் கவனித்துக் கொள்ளும்” என்று விடை கொடுத்தனுப்பினார். நான்
பிள்ளையவர்களிடம் சென்றேன்.

மறைவு

அடிக்கடி ஆசிரியருக்கு ஞாபகம் தவறியது. நள்ளிரவுக்குமேல் நெடு
நேரம் பிரக்ஞை இழந்திருந்தார். பிறகு விழித்துப் பார்த்து ஏதோ சொல்ல
வாயெடுத்தார். அக்குறிப்பு, திருவாசகமென்று சொன்னதாகப் புலப்படுத்தியது.
நான் திருவாசகத்தை எடுத்து அடைக்கலப்பத்தை வாசித்து வந்தேன்.
சிவபெருமான் திருவடியில் அடைக்கலம் புகுவதற்கு என் ஆசிரியர்
தகுதியுடையவரே. அவர் கண்ணை மூடிக்கொண்டே இருந்தார். திருவாசகச்
செய்யுள் அவர் காதின் வழியே உள்ளத்துள் புகுந்து இன்பத்தை
விளைவித்திருக்க வேண்டும். அந்த இன்பம் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சியை
உண்டாக்கியது.

அவர் நெற்றியில் விபூதியை நிறைய ஒருவர் இட்டனர். சவேரிநாத
பிள்ளை அவரைத் தமது மார்பில் சார்த்திக் கொண்டார். அடைக்கலப்பத்தை
வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவரது தேகத்தில் உள்ளங்கால்
முதல் உச்சி வரையில் ஒரு துடிப்பு உண்டாயிற்று. மூடியிருந்த கண்களில்
வலக்கண் திறந்தது. அவ்வளவுதான். சிவலோகத்தில் அதே சமயத்தில் அந்த
நல்லுயிர் புகுவதற்கு வாயிலும் திறந்ததுபோலும்! அவர் மூச்சு நின்றபோதுதான்
அவருடைய தமிழ் உணர்ச்சி நின்றது. திருவாசகம் என் கையிலிருந்து
நழுவியது. கண்ணிலிருந்து நீரருவி புறப்பட்டது.