பக்கம் எண் :

394என் சரித்திரம்

அன்பர் வருத்தம்

அங்கிருந்தவர்களில் சிலர் அரற்றினார்கள். சிலர் துக்கம்
தாங்கமாட்டாமல் வாயைப் பொத்திக்கொண்டனர். நான் ஒன்றும் தோன்றாமல்
என் ஆசிரியரின் புனித உடலையும், அமைதி தவழ்ந்த முகத்தையும், எனக்கு
ஆதரவோடு பாடம் சொல்லிய திருவாயையும், அன்புப் பார்வையில் என்னைத்
தழுவிய கண்களையும் பார்த்துப் பார்த்து விம்மினேன். “இப்போது நிகழ்ந்த
நிகழ்ச்சி பொய்யாக இருக்கக் கூடாதா? பிள்ளையவர்கள் மீண்டும் வாய் திறந்து
பேசக்கூடாதா!” என்ற எண்ணத்தோடு பார்க்கையில் அவர் கண்கள் இமைப்பது
போலவே தோற்றும்; வாய் அசைவதுபோலத் தெரியும்; மூச்சு விடுவது போலக்
கண்ணில் படும். அடுத்த நிமிஷமே எல்லாம் வெறும் தோற்றமாகிவிடும்;
பிரமையினால் விளையும் காட்சிகளாக முடியும்.

ஆசிரியருடைய குமாரரும் மனைவியாரும் அங்கே இருந்தனர். வேறு
பல அன்பர்களும் கூடியிருந்தனர். ஆசிரியர் மறைந்த செய்தி உடனே எங்கும்
பரவி விட்டது. சுப்பிரமணிய தேசிகர் விஷயத்தை அறிந்து வருந்தினார்.
அவருக்கு ஒரு காரியமும் ஓடவில்லை.

மறுநாள்

விடிந்தது; இருண்டிருந்த எங்கள் மனத்திற்கு விடிவு இல்லை. பலர்
வந்து வந்து ஆசிரியர் திருமேனியைப் பார்த்துப் பார்த்துப் புலம்பிவிட்டுச்
சென்றனர். ஆதீன ஞானாசிரியர் சமாதியுற்ற திருநாட் கொண்டாட்டத்திற்
கலந்து கொண்டு இன்பம் அனுபவிக்க வந்தவர்களிற் பலர் ஆதீனத்
தமிழாசிரியர் மறைந்த செய்தி கேட்டுத் துன்பக் கடலில் ஆழ்ந்தனர்.

சுப்பிரமணிய தேசிகர் மேலே நடக்க வேண்டிய காரியங்களுக்குரிய
ஏற்பாடுகளைச் செவ்வனே செய்யலானார். பல ஊர்களிலிருந்து
அபிஷேகஸ்தர்கள் வந்தனர்.

அந்நல்லுடலை ருத்திரபூமிக்கு எடுத்துச் சென்ற போது நான் கண்ட
காட்சியும் கேட்ட வார்த்தைகளும் இன்று நினைத்தாலும் உள்ளத்தைக்
கலக்குகின்றன. எல்லோரும் வாய்விட்டுக் கதறி விட்டார்கள். அவரது புலமைத்
திறத்தைச் சொல்லி வருந்து வாரும், அவரது கவித்துவத்தைப் பாராட்டி
உருகுவாரும், மாணாக்கர்கள்பால் அவர் வைத்திருந்த அன்பை
எடுத்துரைத்துத் துயருறுவாரும், அவர் குண விசேஷங்களை விரித்துப்
புலம்புவாருமாக எங்கே பார்த்தாலும் ஜனங்கள் நிரம்பிவிட்டனர்.