பக்கம் எண் :

அபய வார்த்தை 395

அபிஷேகஸ்தர்கள் அப்போது திருவாசகம் சொல்லிக்கொண்டு
போனார்கள். அதைக் கேட்ட என் தந்தையார், “இனிமேல் திருவாசகத்துக்கு
உரை சொல்பவர்கள் இவர்களைப்போல் யார் பிறக்கப் போகிறார்கள்?” என்று
சொல்லி வருந்தினார். ஆசிரியர் தம் கடைசி நாட்களில் கடைசி நிமிஷம்
வரையில் திருவாசகத்தில் ஒன்றியிருந்ததை அறிந்தவனாதலின்
அவ்வார்த்தைகளைக் கேட்ட போது என் உள்ளமும் உயிரும் நடுங்கின.

பல பேருடைய அறிவுக்கும், கண்ணுக்கும், காதுக்கும் இன்பந் தந்து
வாழ்ந்திருந்த ஆசிரியர் திருவுடலம் அக்கினிபகவானால் அங்கீகரிக்கப்
பெற்றது. சிதம்பரம் பிள்ளை தம் தந்தையாரது உத்தரக்கிரியைகளைச் செய்தார்.
எல்லாம் முடியப் பன்னிரண்டு மணி வரையில் ஆயிற்று. பின்பு யாவரும்
நீராடித் திரும்பினர். நானும் என் ஆசிரியரை அப்பால் பாராத நிலையிலே
விட்டுவிட்டு ஸ்நானம் செய்து வந்தேன்.

ஊர் முழுவதும் ஒளி இழந்திருந்தது.

அத்தியாயம்-64

அபய வார்த்தை

ஆசிரியர் வியோகமடைந்த பிறகு உலகத்தில் எல்லாம் எனக்கு ஒரே
மயக்கமாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
ஒரு வேலையும் செய்யத் தோன்றவில்லை. யாரிடமாவது ஏதேனும் பேசவும்
விருப்பம் உண்டாகவில்லை. ஆசிரியர் இளமையில் இயற்றிய தியாகராச லீலை
என்னும் நூலைக் கையில் வைத்துப் படித்தபடி இருந்தேன். ஆனால் என்
உள்ளம் முழுவதும் அதில் ஈடுபடவில்லை. அடிக்கடி பிள்ளையவர்களது
நினைவு எழுந்து துன்புறுத்தியது. அவருடைய கற்பனை மிகவும் பாராட்டத்தக்க
நிலையில் அந்நூலில் அமைந்திருந்தது. அதனைப் படிக்கப் படிக்க ஆசிரியரது
பிரிவினால் உண்டான துன்பத்தின் வேகம் அதிகமாயிற்று. கண்ணீர்
வீழ்த்தியபடியே படித்தேன். ஆகாரத்திலும் மனம் சொல்லவில்லை.

புதிய கலக்கம்

ஒரு மணிக்குப் பிறகு மடத்திற்குப் புறப்பட்டேன். அங்கே ஒரிடத்தில்
குமாரசாமித் தம்பிரான் சிலருடன் பேசிக் கொண்டிருந்