பக்கம் எண் :

396என் சரித்திரம்

தார். பேச்சு, பிள்ளையவர்களைப் பற்றியதுதான். நான் அங்கே போனவுடன்
அவர் என்னைப் பார்த்து, “எல்லாரைக் காட்டிலும் உங்களுக்குத்தான்
அதிகமான வருத்தம் இருக்கும்” என்றார். நான் மௌனமாக இருந்தேன்.
“பிள்ளையவர்கள் மடத்தில் இருந்ததனால் வெளியூர்களிலிருந்து எவ்வளவோ
பேர்கள் வந்து அவர்களிடம் பாடம் கேட்டார்கள். மடத்தில் எப்போதும்
மாணாக்கர்கள் கூட்டம் இருந்தது. இனிமேல் அப்படியிருக்க இடமில்லை.
அவரவர் அவரவர் ஊருக்குப்போய் இருக்க வேண்டியதுதான். விசேஷ
காலங்களில் இங்கே வந்து போகலாம்” என்று பின்னும் வருத்தத்தோடு அவர்
சொன்னார். அவர் பேச்சிலிருந்து எனக்கு ஒரு புதிய கவலை தோன்றியது.
‘பிள்ளையவர்களோடு எப்போதும் இருந்து பாடம் கேட்டுக் கொண்டும்
எழுதிக்கொண்டும் சுகமாகக் காலத்தைக் கழித்தோம். இனிமேல் நாம் என்ன
செய்வது? இம்மடத்திற்கும் நமக்கும் என்ன உறவு இருக்கப் போகிறது? நம்
நிலை இனி என்ன ஆகும்?” என்ற ஏக்கம் தலைப்பட்டது. “ஒரு
பெருந்துணையாக விளங்கிய பிள்ளையவர்கள் மறைந்ததால் வேறு பற்றுக்
கோடில்லாமல் அலைந்து திரியும் நிலை நமக்கு வந்து விடுமோ” என்று
அஞ்சினேன்.

இக்குழப்பத்தில் அங்கே நிற்பதைவிட ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைப்
பார்த்து வருவது நலமென்றெண்ணி மடத்தினுள்ளே சென்றேன்.

அங்கே ஒடுக்கத்தில் அவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டவுடன்
அதுகாறும் என்னுள் அடங்கியிருந்த துக்கம் பொங்கவே கோவென்று கதறி
விட்டேன். என்ன முயன்றும் விம்மல் அடங்கவில்லை. அடக்க முடியாமல்
எழுந்த என் வருத்தத்தைக் கண்ட தேசிகர், “வருத்தப்பட்டு என்ன செய்வது!
மாற்ற முடியாத நஷ்டம் நேர்ந்துவிட்டது! நமக்கும் வருத்தம் அதிகமாக
இருக்கிறது; வெளிப்படுத்தாமல் இருக்கிறோம். உமக்குத் தாங்க முடியவில்லை.
உம்மிடத்தில் அவருக்கு இருந்த அன்பை வேறு எங்கே பார்க்க முடியும்?”
என்றார்.

தேசிகர் கூறிய ஆறுதல் வார்த்தைகள்

அந்த வார்த்தைகள் என் துக்கத்தை அதிகமாகத் தூண்டி விட்டன;
பின்னும் விம்மினேன்.

“நடந்த காரியத்தை நினைத்து வருந்துவதனால் லாபம் ஒன்றும் இல்லை.
பிள்ளையவர்கள் இல்லை யென்ற குறையைத் தவிர இங்கே ஒரு குறைவும்
இராது. நீர் இனிமேல் கேட்க வேண்டிய பாடங்களை