பக்கம் எண் :

அபய வார்த்தை 399

அப்பால் தியாகராஜ சாஸ்திரிகள் மடத்திற்குச் சென்று தேசிகரிடம் பேசி
வருகையில் என் தந்தையாருடைய சிவ பக்தியையும், சிவ பூஜா
விசேஷத்தையும், சங்கீத ஞானத்தையும் சிறப்பித்துச் சொன்னார், அதுகாறும்
என் தந்தையாரைப்பற்றி அறிந்து கொள்ளாத தேசிகர், “அப்படியா! நமக்கு
இதுவரையில் விஷயம் தெரியாதே! சாமிநாதையரும் சொல்லவில்லையே” என்று
சொல்லி அங்கே நின்றிருந்த என்னைப் பார்த்தார்.

“உமக்குச் சங்கீதத்தில் பழக்கம் இருப்பதற்கு உம்முடைய தந்தையாரே
காரணமாயிருக்க வேண்டும்” என்று தேசிகர் சொன்னார்.

“ஆம்”

“இவ்வளவு நாளாக உம்முடைய தகப்பனாரை இங்கே அழைத்து
வரவில்லையே. அவர்கள் இதற்கு முன் இந்த ஊருக்கு வந்ததில்லையோ?”

“சிலமுறை வந்திருக்கிறார்கள். ஸந்நிதானத்திற்கு அனாவசியமான
தொந்தரவை உண்டாக்கக் கூடாதென்று எண்ணினேன்”

“தொந்தரவா? இப்படிப்பட்டவர்களைப் பார்ப்பதில் நமக்கு எவ்வளவோ
திருப்தியுண்டென்று உமக்குத் தெரியாதா?”

அன்று பிற்பகலில் என் தந்தையார் மடத்திற்கு வந்து சுப்பிரமணிய
தேசிகரைக் கண்டு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அது முதல் அடிக்கடி
என் தந்தையார் தேசிகரிடம் போய்க் கண்டு சல்லாபம் செய்துவரத்
தொடங்கினர். இவ்வழக்கத்தால் என் தந்தையாருக்குச் சுப்பிரமணிய
தேசிகருடைய பெருந்தன்மையும், அறிவுத் திறமையும், உதார குணமும்,
வித்துவான்களிடத்தில் அவர் வைத்திருந்த பேரன்பும் விளங்கலாயின. மடத்தில்
யாரேனும் சங்கீத வித்துவான் வந்து பாடினால் தேசிகர் என் தகப்பனாரை
அழைத்து வரச்செய்து கேட்கச் செய்வார்.

தேசிகர் விடியற் காலத்தில் காவேரிக்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டு
ஆலயம் வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு மடத்திற்குப் போவார். என்
தந்தையாரும் விடியற்காலையில் ஸ்நானம் செய்பவராதலால் அவரும் எழுந்து
காவேரிக்குச் சென்று ஸ்நானம் செய்து ஜபதபாதிகளை முடித்துக்கொண்டு
புறப்படுவார். அவர் புறப்படும் சமயம் தேசிகரும் புறப்படும் சமயமாக
இருக்கும். தேசிகருடன் என் தந்தையாரும் புறப்பட்டு ஆலயம் வரையில் வந்து
விடைபெற்று வீட்டுக்கு