பக்கம் எண் :

தேசிகர் சொன்ன பாடங்கள் 401

தேசிகர், “அப்படியா?” என்று சொல்லி விட்டு ஒடுக்கத் தம்பிரானை
அழைத்து, முதல் நாள் இருவர் தனித்தனியே கொண்டு வந்து கொடுத்த ஒரு
தேங்காயையும் விநாயகரையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
அப்படியே அவர் அவ்விரண்டையும் கொணர்ந்து வைத்தார். அவ்றைச் சுட்டிக்
காட்டி, “இவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளும்” என்று தேசிகர் என்னை
நோக்கிச் சொன்னார்.

அவற்றைக் கண்ட நான், “தேங்காய் நமக்குப் பல வேண்டுமே
ஒன்றைக் கொடுக்கிறார்களே. நாம் விநாயகர் திருவுருவத்தைக்
கேட்கவில்லையே! தகப்பனார் பூஜையிலேயே விநாயக மூர்த்தி இருக்கிறாரே!
இவ்வளவு பெரிய பிள்ளையாரை வைப்பதற்கு இடமில்லையே” என்று
திகைத்தேன்.

தேசிகர், “என்ன யோசிக்கிறீர்? தேங்காயை அசைத்துப்பாரும். இளநீர்
இருக்கிறதா, கொப்பரையா என்று தெரியும்” என்றார்.

அசைத்துப் பார்த்தேன். உள்ளே ஜலம் இருப்பதாகத் தோன்றியது.
“கொப்பரை யன்று; இளநீர் இருக்கிறது” என்றேன்.

“நார் நன்றாக உரித்திருக்கிறார்களா?” என்று புன்சிரிப்புடன் கேட்டார்.

“செவ்வையாய் உரித்திருக்கிறது” என்றேன். உடனே அவர்
அருகிலிருந்த தியாகராஜ சாஸ்திரிகளை நோக்கி, “ரூபா இருபது கொடுத்து
இப்பிள்ளையாரையும், ரூபா பத்துக் கொடுத்து இத் தேங்காயையும் நேற்று
வாங்கினோம்” என்றார்.

சாஸ்திரிகள்:- அவ்வளவு விலையா? பிள்ளையாருக்குக் கொடுத்தாலும்
கொடுக்கலாம்; தேங்காய்க்குக் கொடுக்கலாமா? இப்போது அவ்வளவு
தேங்காய்ப் பஞ்சம் வந்து விட்டதா?

தேசிகர்:- இதற்குக் கொடுக்கலாமென்று நமக்குத் தோற்றியது. இதைக்
கொடுத்தவன் நம்மிடத்தில் அதிக விசுவாசமுள்ளவன்.

சாஸ்திரிகள்:- அப்படியானால் இந்தத் தேங்காய்க்கு விலையென்று
சொல்வானேன்? அவனுக்கு இனாம் கொடுத்ததாக வைத்துக் கொள்ளலாமே.

தேசிகர்:- இல்லை; இல்லை; இத் தேங்காய்க்காகவே கொடுத்தோம்.