பக்கம் எண் :

சந்திரசேகர கவிராஜ பண்டிதர் 417

[நேமிநாதன் - திருமால். வாமிநாதன் - சிவபெருமான்; வாமி - உமை.
பாமினாள் - கலைமகள்.]

தம்பிரான்களும் சடகோபாசாரியரும் கேட்ட கேள்விகளால் மன
அமைதியை இழந்திருந்த பண்டிதர் என்னுடைய பாட்டினால் மிக்க
மகிழ்ச்சியுற்றார். அதன் விளைவாக எழுந்ததே இச்செய்யுள்.

தம்பிரான்கள் கூற்று

மடத்திலிருந்து எல்லோரும் வெளியே வந்தவுடன் அவர்கள்
பண்டிதரைப் பற்றி என்னிடம் குறைகூறத் தொடங்கினார்கள். “என்னையா
பண்டிதர் அவர்? தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு. அவரிடத்தில்
சந்நிதானத்துக்கும் உங்களுக்கும் அவ்வளவு மோகம் ஏற்பட்டது ஏன்? அவர்
பாட்டு ஒன்றாவது ரசமாயில்லையே. அவர் சொன்ன பாட்டு உங்களைப்
பாராட்டுவதற்காக உத்தேசித்ததன்று. நீங்கள் பாடியது போல விரைவில் பாடத்
தமக்கும் முடியு மென்பதைச் சந்நிதானத்துக்குத் தெரிவிக்க
வேண்டுமென்பதுதான் அவர் நோக்கம். பாடினாரே அந்தப் பாட்டுத்தான்
எவ்வளவு லட்சணம்! ‘வாமிநாதன் புகழை வாழ்த்து மென்மேல்’ என்று
தம்மைத் தாமே புகழ்ந்து கொள்கிறாரே. கடைசியடியில் சரியான படி
மோனையையே காணோமே.”

நான் அவர்களைக் கையமர்த்தி, “வித்துவான்களை இப்படி
அவமதிப்பது பிழை. அவர் இந்த ஆதீனத்தைப் பற்றி என்ன நினைத்துக்
கொள்வார்? உங்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமலா அவர்
பேசாமலிருந்தார் சில பழைய நூல்களில் இத்தகைய அமைப்பு உண்டு. அவர்
பெருமை உங்களுக்குத் தெரியாது. பெரிய வித்துவானிடம் பாடங் கேட்டவர்”
என்று சமாதானம் சொன்னேன்.

பண்டிதர் சில நாள் திருவாவடுதுறையிலேயே தங்கினார். அப்போது
நான் அவருடனிருந்து பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
சுப்பிரமணிய தேசிகரிடம் அவர் சாஸ்திர விஷயமான சந்தேகங்களைத்
தெரிந்து கொண்டார். தனிப் பாடற்றிரட்டை இரண்டாமுறை பதிப்பிக்க
உத்தேசித்திருப்ப தாகவும் எனக்குத் தெரிந்த தனிப் பாடல்களையும் திரட்டி
அனுப்பினால் சேர்த்துக் கொள்வதாகவும் சொன்னார். தேசிகர் அவருக்குத்
தக்க மரியாதை செய்து விடை கொடுத்தனுப்பினார்.

கவிராயர்

கும்பகோணத்தில் இருந்த காலத்தில் கவிராஜ பண்டிதர் சில முறை
திருவாவடுதுறைக்கு வந்துபோனதுண்டு. பிற்காலத்தில்