பக்கம் எண் :

42என் சரித்திரம்

சூரிய மூலைக்கு வந்த பிறகு அவருக்குச் சுப்பலக்ஷ்மி யென்னும்
பெண்ணும் சிவராமையர் என்னும் குமாரரும் மீனாக்ஷி யென்னும் குமாரியும்
பிறந்தார்கள்.

என் தந்தையாருக்கு விவாகம் செய்விக்க ஏற்ற பெண்ணைத் தேடிக்
கொண்டிருந்த என் பாட்டனாரும் பாட்டியாரும் கிருஷ்ண சாஸ்திரிகளின்
இயல்பை உண்ர்ந்து அவருடைய மூன்றாம் குமாரியாகிய ஸரஸ்வதியைத் தம்
குமாரனுக்கு மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தனர். விவாகம் நிச்சயமானது
தெரிந்து உடையார் பாளையம் ஜமீன்தார் பொருளுதவி செய்ய, என்
தந்தையாருடைய விவாகம் இனிது நிறைவேறியது.

அத்தியாயம்-8

எனது பிறப்பு

விவாகம் ஆன பிறகு என் தந்தையார் உடையார்பாளையத்திலேயே
இருந்து வந்தனர். அக்காலத்தில் தம் தாய் தந்தையரையும் தம்பியாரையும்
அழைத்து வந்து தம்முடன் இருக்கச் செய்தனர். நடுவில் சில காலம்
உத்தமதானபுரம் சென்று இருக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கு
உண்டாயிற்று. அதனால் உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் உத்தரவு}
பெற்றுக்கொண்டு தாய் தந்தையாரோடும் தம்பியாரோடும் உத்தமதானபுரம்
வந்து தம் வீட்டில் தங்கியிருந்தார். தம்முடைய தந்தையாரால் போக்கியத்திற்கு
விடப்பட்ட குடும்ப நிலங்களை மீட்க வேண்டுமென்ற கவலை அவருக்கு
அதிகமாக இருந்தது. அக்காலத்தில் நிலங்களின் விலை அதற்கு
முன்பிருந்ததைவிட ஏறிக் கொண்டு வந்தது.

குடும்ப நிலமாகிய பன்னிரண்டு மாவும் கணபதி அக்கிரகாரத்தில்
இருந்த அஸ்தாந்தரம் கணபதி ராமைய ரென்பவரிடம் 500 ரூபாய்க்காக என்
பாட்டனாரால் போக்கியத்துக்கு வைக்கப்பட்டிருந்தது. உத்ததானபுரத்தில்
இருந்த அண்ணாத்துரை ஐயரென்பவரிடம் என் பிதா 500 ரூபாய் கடன்
வாங்கி அத் தொகையைக் கொண்டு பன்னிரண்டு மாநிலத்தையும் மீட்டார்.
அப்பால் அந்நிலத்தில் ஆறு மாவை அண்ணாதுரை ஐயரிடம் தாம் பெற்ற
தொகைக்காகப் போக்கியத்துக்கு வைத்தார். எஞ்சியிருந்த
-----------------------------------------------------------------------------

G.A. வைத்தியராமையர், ராவ்பகதூர் G.A. நடேசையர் இவர்களுடைய
பாட்டனார் இவர்.