பக்கம் எண் :

எனது பிறப்பு 43

ஆறு மாநிலத்தில் ஒரு பாதியாகிய மூன்று மாவைத் தம் சிறிய
தந்தையாராகிய ஐயாக்குட்டி ஐயருக்கு அளித்தார். எல்லாம் போக இருந்தது
மூன்று மாநிலமே.

அதிலிருந்து கிடைத்த வருவாய் குடும்பச் செலவுக்குப் போதவில்லை.
அக்காலத்தில் புன்செய் நிலங்களில் கறிகாய் போட்டு வீட்டுக்கு உபயோகித்துக்
கொள்வதும் மிகுந்தனவற்றை விற்று மற்றச் செலவுக்கு வைத்துக் கொள்வதும்
வழக்கம். அப்படிச் செய்து பார்த்தும் கஷ்டம் தீரவில்லை.

பரம்பரையாக வந்த நிலத்தில் ஒரு பகுதி ஸ்வாதீனமானது குறித்து என்
பாட்டனாருக்கும் தந்தையாருக்கும் ஒரு வகையில் திருப்தி உண்டாயிற்று.
ஆயினும் எஞ்சியுள்ள பகுதியையும் கடனிலிருந்து மீட்பதற்கு வழியில்லையே
என்ற வருத்தம் என் பிதாவுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் என்
தாயாருடன் இல்லறம் நடத்தத் தொடங்கினார்.

அக்காலத்தில் கபிஸ்தலம் ‘எஸ்டேட்’டில் மானேஜராகத் தாவீது
பிள்ளை என்னும் கிறிஸ்தவ கனவான் ஒருவர் இருந்தார். அவர் சங்கீதத்தில்
விருப்பம் உடையவர். கனம் கிருஷ்ணையருடைய நண்பர். என் தந்தையார்
கிருஷ்ணையருடைய மாணாக்கரென்பதை அறிந்தவராதலின் அவர் என்
தந்தையாருடைய க்ஷேம லாபங்களைப் பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பார்.
உத்தமதானபுரத்தில் எந்தையார் இருப்பதையும், அவரது குடும்ப நிலையையும்
உணர்ந்து தம்மாலான உதவி புரிய வேண்டுமென்று எண்ணினார். என்
பிதாவை அடிக்கடி கபிஸ்தலத்துக்கு வருவித்து அவருடைய சங்கீதத்தைக்
கேட்டு மகிழ்ந்து பொருளுதவி செய்து வந்தார். அவர் எந்தையார் பால்
காட்டிய மரியாதையைக் கண்ட பிறரும் அவருடைய பெருமையை அறிந்து
கொண்டனர். ஐயம்பேட்டையிலிருந்த சௌராஷ்டிரச் செல்வர்களும், கணபதி
அக்கிரகாரத்தில் இருந்த அப்பாவையரென்பவரும் இங்ஙனமே உபகாரம்
செய்து வந்தனர். இத்தகைய அன்பர்களுடைய உதவியைப் பெற்றுச் சில காலம்
என் தகப்பனார் உத்தமதானபுரத்தில் தங்கியிருந்தனர். அப்போது அவருக்கு
ஸீமந்தம் நடைபெற்றது.

இவ்வாறு இருக்கையில் மேற்கூறிய தாவீது பிள்ளை வேறு
உத்தியோகத்தை மேற்கொண்டு அயலூருக்குச் சென்றுவிட்டமையால் அவரால்
கிடைத்து வந்த பொருளுதவி நின்று போயிற்று. அதனால், காலக்ஷேபத்திற்குக்
கஷ்ட முண்டாகுமென்று அறிந்த என் தந்தையார் மீட்டும் குடும்பத்துடன்
உடையார்பாளையம் சென்று ஜமீன்தாருடைய உதவியைப் பெற்று வாழ்ந்து
வரலானார்.