பக்கம் எண் :

424என் சரித்திரம்

நல்ல ஒழுக்கத்தாலும் சிறிய உத்தியோகத்திலிருந்து படிப் படியாக
அக்காலத்தில் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பெற்ற டிப்டி கலெக்டர் என்னும்
பெரிய உத்தியோகத்தை அடைந்து புகழ் பெற்றார். அவருடைய
மேலதிகாரிகளுக்கு அவரிடத்தில் விசேஷமான மதிப்பும், கீழ்
உத்தியோகஸ்தர்களுக்குப் பயமும் இருந்தன. தமிழில் நல்ல பயிற்சியும் தமிழ்
வித்துவான்களிடத்தில் உண்மையான அபிமானமும் உடையவர். எந்த
இடத்திற்குப் போனாலும் ஆங்காங்குள்ள வித்துவான்களை விசாரித்து அறிந்து
அவர்களைப்பார்த்துச் சல்லாபம் செய்து இன்புறுவார். உத்தியோக முறையில்
மிகவும் கண்டிப்பாக இருப்பார். ஆனால் உண்மையான உழைப்பாளிகளை
முன்னுக்குக் கொண்டு வருவதில் சிறிதும் பின் வாங்கமாட்டார். வைஷ்ணவ
மதஸ்தர்; சிறந்த தெய்வ பக்தியுள்ளவர். ஏழைகள் பால் இரக்கமும் உபகார
சிந்தையும் கொண்டவர். அவர் மகா வித்துவான் பிள்ளையவர்களிடத்தில்
மிகவும் ஈடுபட்டவர். அவர்கள் மூலம் திருவாவடுதுறை மடத்தின்
பெருமையைப் பற்றியும், சுப்பிரமணிய தேசிகருடைய குண
விசேஷங்களைப்பற்றியும் அறிந்து கொண்டவர். நாங்கள்
திருவாவடுதுறையிலிருந்தபோது அவர் திரிசிரபுரத்தில் ஹூஸூர்
சிரேஸ்தேதாராக இருந்தார். அவர் ஒரு நாள் சில அன்பர்களோடு
திருவாவடுதுறைக்கு வந்தார்.

அவர் அடைந்த வியப்பு

அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பலருடன் பழகிப் பெரிய
காரியங்களையெல்லாம் நிர்வாகம் செய்யும் ஆற்றல் படைத்திருந்த
பட்டாபிராமபிள்ளை அவ்வாதீனத்தின் அமைப்பையும் நாள்தோறும்
ஒழுங்காகப் பூஜை, தர்மம், வித்தியாதானம் முதலியன நடைபெற்று
வருவதையும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார். “இங்கே போலீஸ் இல்லை;
படாடோபம் இல்லை; ஆனாலும் காரியங்களெல்லாம் எவ்வளவு ஒழுங்காக
நடக்கின்றன! வித்தியா விஷயத்தில் இங்குள்ளவர்களுக்கு எவ்வளவு
சிரத்தையும் அன்பும் இருக்கின்றன! தலைவரிடத்தில் எல்லோரும் எவ்வளவு
பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள்!” என்று விம்மிதமடைந்து பாராட்டினார்.
சுப்பிரமணிய தேசிகருடைய அறிவுத் திறமையையும் தூய ஒழுக்கத்தையும்
அன்பையும் அறிந்து, “இவர்கள் இருக்கும் இடம் இந்த மாதிரி தான்
விளங்கும். இவர்களைப் போல் தமிழ் நாட்டில் சிலர் இருந்தால் போதும்;
நம்முடைய பாஷை முதலியன பழைய காலம் போல் சிறப்பை அடையும்”
என்று புகழ்ந்தார்.

அகராதி முயற்சி

தேசிகரிடம் அவர் ஒரு முறை பேசுகையில் தமிழ்ப் பாஷைக்கு நல்ல
அகராதி ஒன்று வேண்டுமென்றும் பிள்ளையவர்களைக் கொண்டு