பக்கம் எண் :

ராவ்பகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை 427

ராவ்பகதூர் திரு, பட்டாபிராம பிள்ளை

கிளர்வசனத் தாற்றளர்ந்தேன் கெட்டியென நிச்சயித்தேன்
கேட்டுக் கொண்ட
வளம்வாய்ந்த வகராதி வருமென்றே திரும்பினன்காண்
வனப்பின் மிக்கோய்.

திரிசிரபுரம், கலி, 4978-தாது டு புரட்டாசி மீ 13 Œ (27-9-1877) [சமுசயம் - சந்தேகம். கெட்டி - திறமையையுடையோய்]

இந்தக் கடிதத்தைக் கண்டு நாங்களெல்லாம் வியப்புற்றோம்.
இப்பாட்டுக்கள் புலவர் பாடல்களைப் போன்றனவாக இராவிட்டாலும்
பட்டாபிராம பிள்ளைக்கு எவ்வளவு தமிழன்பு இருந்ததென்பதை
வெளிப்படுத்துகின்றன. ஓர் அரசாங்க உத்தியோகஸ்தர் அவ்வளவு அன்புடன்
செய்யுள் இயற்றி விண்ணப்பம் செய்யும் திறமை படைத்திருப்பதே பெரிய
ஆச்சரியமன்றோ?

அவர் கடிதம் வந்த சில நாட்கள் வரையில் சுப்பிரமணிய தேசிகரும்
நாங்களும் அகராதியைப் பற்றிப் பேசினோம், வீரமா முனிவரென்னும் பெஸ்கி
பாதிரியார் இயற்றிய சதுரகராதியின் அச்சுப் பிரதியும் ஏட்டுப் பிரதியும்
வருவிக்கப்பட்டன. நிகண்டுகளை எடுத்துத் தட்டிக் கொட்டி வைத்தோம். இந்த
உத்ஸாகம் சில நாட்கள் வரையில் இருந்தது. பிறகு அகராதியைப் பற்றிய
பேச்சே நின்று போயிற்று. பட்டாபிராம பிள்ளையைப் பற்றிய பேச்சு வந்தால்
மட்டும், “திடீரென்று வந்து அகராதி எந்த மட்டில் இருக்கிறது?” என்று அவர்
கேட்டால் என்ன செய்வது? என்ற யோசனை உண்டாகும்.

தம்பிரான்களின் சிபாரிசு

அக்காலத்தில் என்னிடம் படித்து வந்தவர்களுள் விசுவலிங்கத்
தம்பிரான் முதலிய சிலர், சுப்பிரமணிய தேசிகர் பகற் போசனத்தின் பின்
சிரமபரிகாரம் செய்து கொள்ளும்போது அவர் பாதங்களை வருடிப் பணிவிடை
புரிவது வழக்கம். அவ்வாறு அவர்கள் செய்யும் பொழுது தேசிகர் நடைபெறும்
பாடங்களைப் பற்றி விசாரிப்பார்; பாடங்களுக்குப் பொருளும் அவற்றிற் கண்ட
விஷயங்களிற் சில கேள்விகளையும் கேட்பார். அவற்றிற்கு விடை கூறிய பின்
தேசிகர் சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்துத் தம்பிரான்கள் என்னைத்
திருவாவடுதுறையிலேயே வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் இருப்பதற்கு வீடு
கட்டிக் கொடுக்க வேண்டுமென்றும் மாதச் சம்பளம் ஏற்படுத்த
வேண்டுமென்றும் சொல்லிக் கொள்வார்களாம்.