பக்கம் எண் :

428என் சரித்திரம்

தேசிகர் என்னைக் காணும்பொழுது, “என்ன ஐயா! உம்மைப் பற்றி
உம்முடைய மாணாக்கர்களாகிய தம்பிரான்கள் சிபாரிசு செய்கிறார்கள். உமக்குச்
சௌகரியம் பண்ணிவைக்க வேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்” என்று
சந்தோஷத்துடன் சொல்லி, “நன்றாய்ப் பாடம் சொல்லவேண்டும்” என்று
கட்டளையிடுவார்.

அவ்வார்த்தைகள் என் உள்ளத்தைக் குளிர்விக்கும். அவர்கள்
வேண்டுகோள் பலிப்பதைப் பற்றி நான் அதிகக் கவலை கொள்ளவில்லை.
அவர்கள் என்பால் கொண்டிருந்த அன்பையும் என் உழைப்பு வீணாகவில்லை
என்பதையும் உணர்ந்து திருப்தியடைந்தேன்.

அத்தியாயம்- 70

புதுவீடு

திருவாவடுதுறையில் திருக்குளத்தின் வடகரையில் கீழ் மேலாக ஓர்
அக்கிரகாரம் உண்டு. சுப்பிரமணிய தேசிகர் உத்தரவால் அதன் வட சிறகில்
கீழைக்கோடியில் இரண்டு கட்டுள்ள வசதியான வீடு ஒன்று அமைக்கப்
பெற்றது. மடத்திலிருந்து நல்ல சாமான்களை அனுப்பி அவ்வீட்டைத் தேசிகர்
கட்டுவித்தார். அது கட்டி முடிந்தவுடன் தேசிகரே நேரில் வந்து அதனை ஒரு
முறை பார்வையிட்டுச் சென்றார். “அவ்வீடு எதற்காகக் கட்டப்படுகிறது?”
என்பது ஒருவருக்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை. தம்பிரான்கள்
மாத்திரம், “எங்கள் வேண்டுகோள் பலிக்கும் காலம் வந்துவிட்டது” என்று
சந்தோஷமுற்றார்கள். நானும் ஒரு வகையாக ஊகித்து அறிந்தேன்.

தாய் தந்தையர் வரவு

ஒருநாள் தேசிகர் என்னை நோக்கி, “உங்கள் தகப்பனார் ஊருக்குப்
போய்விட்டு வருவதாகச் சொன்னார்களே; ஏன் வரவில்லை?” என்று கேட்டார்.
“அவர்கள் அப்பக்கங்களிலுள்ள அன்பர்களின் ஆதரவு பெற்று இருந்து
வருகிறார்கள்” என்றேன்.

“அவர்களுக்கு உடனே கடிதம் எழுதி இங்கேயே வந்து விடும்
படிதெரிவியும். முதுமைப் பிராயத்தில் உம்மை விட்டு அவர்கள் இருப்பது
சரியன்று” என்று தேசிகர் சொன்னார்.

அவர் சொன்னது உண்மைதான். எனக்கும் அவர்களைப் பிரிந்திருப்பது
வருத்தமாகவே இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்கிக்