பக்கம் எண் :

472என் சரித்திரம்

பாடம் சொல்லுவார். அதில் அவருக்குச் சலிப்பே இராது.
மற்றவர்களுக்கு அவர் பாடம் சொல்லும்போதும் நான் உடனிருந்து கேட்டு
வருவேன். அவர் விருப்பப்படி நானும் அவர் முன்னிலையில் சிலருக்குப்
பாடம் சொல்வேன். எந்த விஷயத்திலும் கண்டிப்பாக இருக்கும் அவர் பாடம்
சொல்லும் போது நான் இராவிட்டால் உடனே அழைத்து வரச் செய்வார்.

ஊசி மிளகாய்

ஒரு நாள் பகற்போசனத்திற்கு மேல் தெற்குக் குளப்புரைத்
தோட்டத்தில் நமசிவாய தேசிகர் சில மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி
வந்தார். உண்ட இளைப்பால் நான் ஓரிடத்தில் படுத்து உறங்கி விட்டேன்.
பாடம் நடைபெறும்போது நான் அருகில் இராமையைக் கண்ட நமசிவாய
தேசிகர் உடனே என்னை அழைத்து வரும்படி ஒருவரை அனுப்பினார்.
அவருடைய ஆஞ்ஞையை மறுத்துப் பேச யாருக்கும் தைரியம் இராது. என்னை
அழைக்க வந்தவர்கள் நான் தூங்கின இடத்தை அடைந்தார். அயர்ந்து தூங்கிய
என்னைக் கூப்பிட்டுப் பார்த்தார்; நான் எழவில்லை பிறகு தட்டி எழுப்பினார்.
விழித்துக் கொண்டேன். ஆயினும் எனக்கிருந்த சிரமம் நீங்கவில்லை; பாதித்
தூக்கத்தில் எழுந்தமையால் சிரமம் அதிகமாயிற்று.

“பிறருடைய கஷ்டம் தெரியவில்லையே; இப்படி நிர்ப்பந்திக்கிறார்களே!”
என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. என் வருத்தத்தை நான் வெளிப்படுத்த
முடியுமா? அல்லது அப்போது போகாமல் தான் இருக்க முடியுமா?

நான் நடந்து சென்றேனே ஒழிய என் கால்கள் தள்ளாடின. கண்
இமைகளைத் தூக்கத்தின் கனம் கீழே இழுத்தது. போகும் வழியில் ஊசி
மிளகாய்ச்செடி ஒன்றிருந்தது. அதிலிருந்து ஒரு பழத்தைப் பறித்துக் கசக்கி என்
கண்களில் தடவிக் கொண்டேன். எனக்கிருந்த வருத்தம் மேல் விளைவை
எண்ணாத நிலையில் என்னை வைத்தது.

மிளகாயைத் தடவிக்கொண்டதுதான் தாமதம்; கண்கள் முழுவதும் ஒரே
எரிச்சலாக எரிய ஆரம்பித்து விட்டன. தேளுக்கு அஞ்சிப் பாம்பின் வாயிலே
புகுந்த கதையாயிற்று என் நிலை. என்னால் மேலே நடக்க முடியவில்லை. கீழே
உட்கார்ந்து விட்டேன்.

என்னுடைய செய்கையை அறிந்து யாவரும் வருந்தினார்கள். என்
நண்பர்கள் மாத்திரம் எனக்கு அப்போது எவ்வளவு சிரமம் இருந்திருக்க
வேண்டுமென்பதை ஊகித்துக் கொண்டனர்.