பக்கம் எண் :

பாடும் பணி 473

சைவ சாஸ்திரம் கேட்டல்

நடசிவாய தேசிகர் பாடம் சொல்லும்போது சைவ சாஸ்திர விஷயங்கள்
வந்தால் அவர் மேற்போக்காகச் சொல்லிவிட்டு விடுவார். சைவ சித்தாந்த
நூல்களைத் தனியே படிக்க வேண்டுமென்பது அவர் கருத்து.
பிள்ளையவர்களிடம் நான் பாடம் கேட்ட காலத்தில் அங்கங்கே வரும்
சாஸ்திரக் கருத்துக்களை நன்றாகத் தெரிந்து கொண்டேன். சுப்பிரமணிய
தேசிகர் யாருக்கேனும் சிவஞான போத பாஷ்யத்தைச் சொல்ல நேரும்போது
என்னையே படித்துக்காட்டச் சொல்வார். இருப்பினும் சிவஞான போதச்
சிற்றுரை முதலிய சித்தாந்த சாஸ்திரங்களை முறையாகக் கேட்டால் நலமாக
இருக்குமென்பது என் எண்ணம்.

நமசிவாய தேசிகருக்கு ஓய்வு இல்லை. என் கருத்தை ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகர் எப்படியோ உணர்ந்தனர். என்னை ஒரு நாள் அழைத்து, “நாமே
உமக்குச் சிற்றுரை முதலியவற்றைப் பாடம் சொல்வோம். படிக்க வேண்டுமென்ற
ஆவலுள்ள உம்மை விடத் தக்க பாத்திரம் வேறு யார் இருக்கிறார்கள்?” என்று
சொல்லிச் சித்தாந்த நூல்களை முறையாகக் கற்பிக்கக் ஆரம்பித்தார். சிவஞான
போதச் சிற்றுரை, சிவஞான சித்தியார் பொழிப்புரை முதலிய பல நூல்களையும்,
வேறு சில கருவி நூல்களையும் கேட்டு எனக்குள்ள குறையை நிவர்த்தி செய்து
கொண்டேன்.

அத்தியாயம்-79

பாடும் பணி

திருவாவடுதுறையில் என் பொழுதுபோக்கு மிக்க இன்பமுடையதாக
இருந்தது. பாடம் சொல்வதும், படிப்பதும், படித்தவர்களோடு பழகுவதும்
நாள்தோறும் நடைபெற்றன. சுப்பிரமணிய தேசிகருடைய சல்லாபம்
எல்லாவற்றிற்கும் மேலான இன்பத்தை அளித்தது.

தேசிகர் தினந்தோறும் அன்பர்களுக்குக் கடிதம் எழுதுவார். ஒவ்வொரு
நாளும் ஐம்பதுக்குக் குறையாமல் கடிதங்கள் எழுதப் பெறும். ஒவ்வொன்றுக்கும்
உரிய விஷயத்தை ராயசக்காரர்களிடம் நிதானமாகச் சொல்லுவார்; தாமும்
எழுதுவார். ராயசக்காரர்கள் தேசிகர் கருத்தின்படியே எழுதக்கூடிய
திறமையுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தலைவராக
இருந்தவர்