பக்கம் எண் :

48என் சரித்திரம்

பிள்ளை, முத்துவேலாயுதம் பிள்ளை, பாலகிருஷ்ண பிள்ளை,
ஆறுமுகம் பிள்ளை முதலியோர். அரண்மனையில் ராயஸமாக இருந்த ராம
பத்திரையரென்பவரும், ஜமீன்தாரின் குருவாகிய தாத்தாசாரியா ரென்பவரும்,
கிராம முன்சீபாக இருந்த வேங்கட சுப்பையரென்பவரும் வக்கீல்
ரங்காசாரியாரென்பவரும் அவ்வப்போது தங்கள் தங்களால் இயன்ற
உபகாரத்தைச் செய்து வந்தார்கள்.

நான் பிறந்தபோது எனக்குச் சாமிநாதன் என்னும் பெயர் இடப்பட்டது.
சாமிமலை என்னும் ஸ்தலத்திலுள்ள முருகக் கடவுளுக்குச் சாமிநாதனென்பது
திருநாமம். எங்கள் ஊரினரும் பிறரும் அந்த ஸ்தலத்துக்குச் சென்று
வருவார்கள். எங்கள் குடும்பத்தினருக்கும் அதில் ஈடுபாடு அதிகம். அது
பற்றியே எனக்கு அப்பெயர் இட்டார்கள். எல்லோரும் என்னை, ‘சாமா’
என்றே அழைப்பார்கள். சாமிநாதனென்பதே மருவி அவ்வாறு ஆயிற்று.

என் தந்தையார் இராமாயணப் பிரசங்கம் செய்யுங் காலங்களில் என்
சிறிய தந்தையாரான சின்னசாமி ஐயர் உதவி புரிவார். அரியிலூர்ச்
சடகோபையங்கார் வீணை வாசிப்பதிற் பழக்கமுள்ளவராதலின் அவரிடம் என்
சிறிய தகப்பனார் வீணை பயின்றார்.

நாங்கள் அரியிலூரில் இருந்த காலத்தில் என் சிறிய தந்தையாருக்குக்
கலியாணம் நடைபெற்றது. மாயூரத்தில் மகாதானத்தெருவில் இருந்த
சேஷையரென்பவர் குமாரியாகிய லக்ஷ்மியை அவர் மணந்து கொண்டார்.
இராமாயணப் பிரசங்கத்தினாற் கிடைத்த பணமும் சில செல்வர்களுடைய
உதவியாற் கிடைத்த பொருளும் அந்தக் கலியாணத்திற்கு உபயோகமாயின.

அந்த மணத்தின் முன்பும் பின்பும் என் தந்தையார் சில முறை மாயூரம்
செல்ல நேர்ந்தது. அக்காலத்தில் அங்கே கோபால கிருஷ்ண பாரதியார்
இருந்து வந்தார். அவருடைய பழக்கம் என் தந்தையாருக்கு உண்டாயிற்று.
கோபால கிருஷ்ண பாரதியார் சில காலம் கனம் கிருஷ்ணையரிடம்
பயின்றவராதலின் அந்த வித்துவானுடைய பந்துவும் மாணாக்கருமாகிய என்
பிதாவிடம் அவருக்கு மிக்க அன்பு உண்டாயிற்று. என் தந்தையாரை அவர்
காணும் போதெல்லாம் கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனங்களைச் சொல்லச்
செய்து கேட்டு இன்புறுவார். அவருடன் பழகும்போது என் பிதாவுக்குத் தம்
குருகுல வாசம் நினைவுக்கு வந்தது. இருவரும் சங்கீத சம்பந்தமான
சம்பாஷணையிற் பொழுது போக்குவார்கள். இரண்டு பேரும் சிவபக்தர்கள்;
அத்துவைத சாஸ்திரப் பயிற்சியுடையவர்கள்.