பக்கம் எண் :

492என் சரித்திரம்

டால் இவர் திருத்தமாக விடையளிப்பார். அதிலிருந்து நான் முன்பு சொல்லியது
உண்மை யென்பது விளங்கும்” என்று செட்டியார் சொன்னார்.

ஆதீன வித்துவான்

உடனே செட்டியார் என்னை நோக்கி, எனக்குப் பண்டார சந்நிதிகள்
அளித்த யோக்கியதா பத்திரத்தைக் காட்டும்படி சொன்னார். நான் எடுத்துக்
கொடுத்தேன். அதை அவர் வாங்கி B. ஹனுமந்தராவ் என்னும் ஆசிரியரிடம்
கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவர் அவ்வாறே வாசிக்கத் தொடங்கி, ‘இப்
பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான்”
என்று வாசித்து நிறுத்தி மற்றவர்களுடைய முகங்களைப் பார்த்தார்
முற்றுப்புள்ளியே இல்லாமல் எழுதியிருந்த அந்தப் பத்திரிகையில்
வாக்கியங்களை எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம். சுப்பிரமணிய தேசிகர்,
“நமது ஆதீன வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் ஆறு வருஷ
காலம் இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி” என்று
அச்சிறப்பைப் பிள்ளையவர்களைச் சார்த்தி எழுதுவித்திருந்தார். ஹனுமந்தராவ்
வாசித்தபோது, “சாமி நாதையர் நமது ஆதீன வித்துவான்” என்று நிறுத்தியது
எனக்குப் பெரிய அனுகூலத்தை உண்டாக்கியது. என்னையே ஆதீன
வித்துவானாக எல்லோரும் எண்ணி வியப்புற்றார்கள். இதைக் கவனித்த நான்,
“ஊழ்வினையின் பலம் இது” என்று எண்ணி மிகவும் மகிழ்ந்தேன்.

பரீக்ஷை

அப்பால் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு புஸ்தகத்தைக்
கையில் எடுத்து வைத்துக் கொண்டனர். முதலில் ஒருவர் பிரபுலிங்கலீலையை
என்னிடம் பிரித்துக் கொடுத்து நடுவில் ஒரு செய்யுளைக் காட்டிப் பொருள்
கூறும்படி சொன்னார். நான் அதை ராகத்தோடு வாசித்துச் சந்தர்ப்பத்தை
விளக்கிப் பொருளையும் விரிவாகச் சொன்னேன். அப்போது சிவராமையரென்ற
ஆசிரியர், “நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இவரைப் பரீக்ஷை செய்து
கொள்ளுங்கள்; என் மட்டில் திருப்தியே. சங்கீத ஞானம் இவருக்கு இருக்கிறது.
பாட்டைக் காதுக்கு இனிமையாகப் படிக்கிறார்” என்றார்.

“படிக்கும்போதே நிதானமாக நிறுத்தி அர்த்தம் விளங்கும்படி
படிக்கிறார்” என்றார் மற்றொருவர்.