பக்கம் எண் :

சோதனையில் வெற்றி 493

பிறகு சாது சேஷையர் திருவிளையாடற் புராணத்தில் சில பாடல்களை
எடுத்துக் கொடுத்தார். அவற்றைத் தக்கபடி படித்துக் காட்டிப் பொருளும்
சொன்னேன்.

நன்னூலில் மிக நுட்பமான கேள்விகள் சிலவற்றை ஆர். வி.
ஸ்ரீநிவாஸையர் கேட்டார். எல்லாவற்றிற்கும் திருப்தியாக விடையளித்தேன்.
இவ்வாறு ஆசிரியர் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோற்றியபடி கேள்வி
கேட்டுத் திருப்தியுற்றனர்.

செய்யுள் இயற்றல்

அப்பால் செட்டியார், “நூதனமாகப் பாடல்களை இயற்றும் பழக்கமும்
இவருக்கு உண்டு” என்று சொல்லி நான் இயற்றிய பாடல்களில் சிலவற்றைச்
சொல்லும்படி கூறவே, நான் சொன்னேன். ஸ்ரீநிவாஸ ஐயர், “பாடம் சொல்லும்
சக்தி இருக்கிறதாவென்று நாம் கவனிக்க வேண்டுமே ஓழியச் செய்யுளியற்றும்
வன்மையைப் பற்றிக் கவனிக்க வேண்டுவதில்லை” என்றார்.

“அந்தச் சக்தி இருந்தால் வேண்டாமென்பீர்கள் போல் இருக்கிறதே?”
என்று செட்டியார் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள்.

ஓர் ஆசிரியர், “இப்போது அப்படிப் பாடுவாரா?” என்று கேட்டார்.

செட்டியார், “ஏதோனும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொடுத்தால்
விரைவில் அதை அமைத்துப் பாடுவார்” என்றார்.

எந்த விஷயத்தைப் பற்றிப் பாடச் சொல்லலாமென்று எல்லோரும்
யோசிக்கையில், செட்டியார் சேஷையர் விஷயமாகச் செய்யலாமென்றார்.
சேஷையரோ ஆராவமுதன் விஷயமாக இருக்கட்டுமென்றார். மற்றொருவர்
“ஆராவமுதன் விஷயமாக ஒரு பழைய பாடலைச் சொன்னாலும்
சொல்லிவிடலாம்” என்று சொல்லிவிட்டு, ஸ்ரீநிவாசையர் விஷயமாகச்
செய்யலாமென்றார். ஸ்ரீநிவாசையர், “இங்கே இருப்பவர்களுக்கெல்லாம்
தமிழாசிரியர் செட்டியாரவர்கள் அவர்கள் விஷயமாகச் செய்வது தான்
பொருத்தமாக இருக்கும்” என்றார். சேஷையருள்பட எல்லாரும் அதற்குச்
சம்மதித்தார்கள்.

“கடைசியில் என்னிடமே தள்ளிவிட்டீர்களா? சரி. என்ன விஷயத்தை
அமைக்க வேண்டுமோ அதையும் சொல்லி விடுங்கள்” என்றார் செட்டியார்.

அப்போது ஸ்ரீநிவாசையர், “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம்
நீங்கள் முதலிற் படித்தவர்கள். நான் பின்பு படித்தவன்.