பக்கம் எண் :

506என் சரித்திரம்

செட்டியார் என்னைப் பார்த்து, “ராயர் இப்படியே அடிக்கடி வந்து
கவனிக்கக்கூடும். எப்பொழுது வந்து கவனித்தாலும் அதை என்னிடம் சொல்ல
வேண்டும் என்றார்.

மடத்து நிகழ்ச்சிகள்

அந்த வாரம் முழுவதும் உத்ஸாகத்தோடு என் கடமையைச் செய்து
வந்தேன். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் செட்டியார் வீட்டிற்குச்
சென்று அவரோடு பேசி வருவேன். அன்றன்று நடந்தவற்றை அவரிடம்
தெரிவிப்பேன்.

திருவாவடுதுறையிலிருந்து ஒவ்வொரு நாளும் யாரேனும் வந்து
என்னைக் கண்டு நிகழ்ந்தவற்றைத் தெரிந்து கொண்டு செல்வார். அங்கே
மடத்தில் என்னிடத்தில் படித்தவராகிய தெய்வசிகாமணி ஐயரென்பவர் சில
நாட்கள் வந்து செய்திகள் தெரிந்து சென்றார். அவர் மூலமாகச் சுப்பிரமணிய
தேசிகர் என்னைப் பற்றி அங்கே வருபவர்களிடம் சந்தோஷத்தோடு பேசி
வருவதாக அறிந்தேன்.

கும்பகோணத்திலிருந்து யார் போனாலும் தேசிகர் என்னைப்பற்றி
விசாரிப்பார். காலேஜில் படித்து வந்த பிள்ளைகளின் தந்தையாரோ
உறவினர்களோ மடத்துக்குப் போவார்கள். அவர்கள் தங்கள் வீட்டுப்
பிள்ளைகள் காலேஜில் படிப்பதாகவும் என்னைப் பற்றித் திருப்தியாகச்
சொல்லுவதாகவும் தெரிவிப்பார்கள். கேட்ட தேசிகர் மகிழ்ச்சியடைவார்.
தமிழில் அன்பும், என்பால் அபிமானமும் உள்ள பலர் காலேஜில் பாடம்
நடக்கும்போது புறத்தே நின்று நான் பாடம் சொல்லுவதைக் கேட்டிருந்து நான்
வெளியே வந்தவுடன் தங்கள் திருப்தியைத் தெரிவிப்பார்கள். இவ்வளவும்
சேர்ந்து, ‘நாம் ஒரு புதிய வேலையை மேற்கொண்டிருக்கிறோமே; எப்படி
நிர்வகிக்கப் போகிறோம்!’ என்ற கவலை எனக்கு இம்மியளவும் இல்லாதபடி
செய்து விட்டன.

திருவாவடுதுறை மடத்தில் நான் சந்தோஷமாகப் பாடம் சொல்லிக்
கொண்டிருந்தேன். அங்கே நான் அடைந்த இன்பம் ஒரு வகை, கும்பகோணம்
காலேஜில் நான் அடைந்த இன்பம் வேறு வகை. இரண்டிடங்களிலும் கட்டுப்
பாட்டுக்கடங்கி நடக்கும் நிலை இருப்பினும், மடத்தில் பல விஷயங்கள்
ஒன்றோடொன்று இணைந்திருந்தமையால், சம்பிரதாயம், மடத்து நிர்வாகம்
முதலியவற்றினிடையே தமிழ்க் கல்வியின் தொடர்பு மாத்திரம் உடையவனாக
நான் இருந்தேன். சுப்பிரமணிய தேசிகரும் பல துறைகளில் தம் கவனத்தைச்
செலுத்த வேண்டியவராக இருந்தார். காலேஜிலோ கல்வியையன்றி வேறு
விஷயங்களுக்கு இடமில்லை. எவ்வளவு பெரிய