பக்கம் எண் :

கவலையற்ற வாழ்க்கை 527

அவர், “எல்லாம் சந்நிதானத்தின் பரிபூர்ண கிருபையால் உண்டானவை.
உங்களுக்கு ஒரு பதவி கிடைத்தது. உங்கள் நண்பனான எனக்கு இந்தப் பதவி
கிடைத்தது” என்று நன்றியறிவோடு சொல்லிச் சுப்பிரமணிய தேசிகருடைய
குணாதிசயங்களை மிகவும் பாராட்டினார்.

குமாரன் ஜனனம்

எனக்குக் காலேஜில் வேலையான சில மாதங்களுக்குப் பிறகு இறைவன்
திருவருளால் நான் குடியிருந்த வீட்டில் எனக்கு ஒரு குமாரன் பிறந்தான்.
இந்தச் சந்தோஷச் செய்தியைத்தெரிவிக்க என் பிதா திருவாவடுதுறைக்குச்
சென்றார். கற்கண்டு சர்க்கரையுடன் சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்க
வேண்டிய இடத்தில் பார்த்துச் சொன்னபோது அவர் பரம சந்தோஷ
மடைந்தார். உடனே வீசைக் கணக்காகக் கற்கண்டு கொண்டு வரச் செய்து
மடத்திலுள்ள யாவருக்கும் அளித்து, “நம்முடைய சாமிநாதையருக்கு ஆண்
குழந்தை பிறந்திருக்கிறது” என்று தாமே சொல்லிச் சொல்லி இன்புற்றார்.
அவருடைய மாசு மறுவற்ற அன்பைக் கண்டு என் தந்தையார் விம்மிதமுற்றார்.
குழந்தையின் ஜாதகத்தைக் கவனித்தவர்கள், “இக்குடும்பத்திற்கு இனி
மேன்மேலும் நன்மை உண்டாகும்” என்று சொன்னார்கள். என் தந்தையார்
அந்தச் செய்தியைக் கேட்டு ஆறுதலுற்றார். உத்தமதானபுரத்திற்கு
அருகிலிருக்கும் சிறந்த சிவஸ்தலமாகிய திருநல்லூரில் கோயில்
கொண்டெழுந்தருளியுள்ள ஸ்ரீ கலியாண சுந்தரேசுவரருக்குச் செய்து கொண்ட
பிரார்த்தனையின் மேல் பிறந்தமையால் குழந்தைக்கு ‘கலியாண சுந்தரம்’ என்று
நாமகரணம் செய்தார்கள். மதுரைப் பெருமானுக்கும் உரிய திருநாமமாகிய அது
ஒரு வகையில் என் ஆசிரியருடைய ஞாபகத்தையும் உண்டாக்கியது.

தந்தையார் செய்த உபகாரம்

நான் ஒரு குழந்தைக்குத் தந்தை யென்னும் நிலையை அடைந்தும்
குடும்பப் பாதுகாப்பில் நான் குழந்தையாகவே இருந்தேன். நான் உண்டு, என்
வேலை உண்டு, என் புஸ்தகங்கள் உண்டு. - இவ்வளவோடு நான் நின்றேன்.
குடும்பப் பாதுகாப்பைப் பற்றியோ, வரவு செலவைப் பற்றியோ,
விசேஷங்களைப் பற்றியோ நான் கவலை கொள்ளுவதில்லை. அவற்றைக்
கவனிக்கும் பொறுப்பு முழுவதையும் என் தந்தையாரே மேற்கொண்டார்.
சம்பளம் வந்தவுடன் அதை அவர் கையில் கொடுத்து விடுவேன். ஒரு பைசா
வேண்டுமானாலும் அவரிடமிருந்து பெற்றே செலவிடுவேன். இந்நிலையில்
எவ்வளவோ