பக்கம் எண் :

528என் சரித்திரம்

சௌகரியம் இருப்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தேன். உப்பில்லை,
புளியில்லை யென்ற குறை காதில் விழாதிருப்பதைப்போன்ற சுகம் வேறு
இல்லை. குடும்பப் பாதுகாப்பு விஷயத்தில் அவசியமான செலவை முன்பே
யோசித்துச் செட்டாகச் செய்யும் கடமையை என் தந்தையார் ஏற்றுக்
கொண்டார். இல்லையேல், ஒரு நாளில் பாதி நேரம் அதிலேயே எனக்குச்"
சென்றிருக்கும். என்தந்தையார் எனக்கு இளமை முதல் உதவி புரிந்தாலும்
குடும்பச் சுமையை என் தலையில் வைக்காமல் யான் கவலையின்றி வாழும்படி
செய்த உபகாரத்தை யான் என்றும் மறக்க இயலாது. தமிழுக்கும் எனக்கும்
உள்ள தொடர்பு வர வரப் பெருகி வளர்வதற்கு அந்த உதவியே
காரணமாயிற்று.

அத்தியாயம்- 88

“என்ன பிரயோசனம்?”

காலேஜ் வேலையைப் பார்த்துக் கொண்டும் வீட்டுக்கு வரும்
மாணாக்கர்களுக்கு ஒழிந்தநேரங்களில் பாடம் சொல்லிக் கொண்டும் பொழுது
போக்கி வந்தேன். அச்சமயம் அரியிலூரிலிருந்து சேலம் இராமசுவாமி
முதலியாரென்பவர் கும்பகோணத்துக்கு முன்சீபாக மாற்றப் பெற்று வந்தார்.
அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டுபோய் விட்டது. அவருடைய
நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத் துறை தோன்றியது,
தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது. அந்தாதி, கலம்பகம்,
பிள்ளைத்தமிழ், உலா, கோவை முதலிய பிரபந்தங்களிலும் புராணங்களிலும்
தமிழின்பம் கண்டு மகிழ்வதோடு நில்லாமற் பழமையும் பெருமதிப்புடைய
தண்டமிழ் நூல்களிற் பொதிந்து கிடக்கும் இன்றமிழியற்கையின்பத்தை மாந்தி
நான் மகிழ்வதோடு, பிறரும் அறிந்து இன்புறச் செய்யும் பேறு எனக்கு
வாய்த்தது.

சேலம் இராமசுவாமி முதலியார்

முதலியார் சேலத்தில் ஒரு பெரிய மிட்டா ஜமீன்தார் பரம்பரையினர்.
இளமையிலேயே பேரறிவு படைத்து விளங்கினார். தமிழிலும் சங்கீதத்திலும்
வடமொழியிலும் பழக்கமுள்ளவர். கும்பகோணத்தில் வேலை பார்த்து வந்த
காலத்தில் அவருடைய திறமை ஓரளவு வெளிப்பட்டு ஒளிர்ந்தமையால்
அவரைத் தக்க கனவான்கள் சென்று பார்த்துப் பேசிவிட்டு வருவார்கள்.
கும்பகோணத்துக்கு