பக்கம் எண் :

அன்பர் பழக்கமும் ஆராய்ச்சியும் 547

"எந்நாடும் புகழினிய கோபால ராயவண்ணல்
இணைமிக் கோங்கும்
மின்னாடும் மணிமாடச் சென்னைநகர் வரச்செய்த
விதந்தான் மன்னோ.”

[‘தொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து’ என்பது ஒளவையார் பாடிய
பழைய வெண்பாவின் பகுதி.]

உபசாரமெல்லாம் முடிந்த பிறகு நான் தனியே கோபாலராவ் வீட்டிற்குச்
சென்று அவரிடம், “தங்களுக்குப் பின் வருபவர் எப்படி இருப்பாரோ,
அறியேன். தாங்கள் எனக்கு ஒரு யோக்கியதா பத்திரம் தந்தால்
நலமாயிருக்கும்” என்றேன். அவர், “அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட
வேண்டாம். யார் வந்தாலும் உங்களிடம் பிரீதீயாகவே இருப்பார்கள். நான்
யோக்கியதா பத்திரம் தனியே எழுதித் தரவேண்டுமென்ற அவசியம் இல்லை.
உங்களைப்பற்றி மேலதிகாரிகளுக்குச் சிபாரிசு செய்து எழுதிய கடிதத்தின் பிரதி
ஒன்றைக் காலேஜிலிருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதுவே போதும்”
என்றார். அதிலிருந்து என்னைப்பற்றிச் சிறப்பாக மேலதிகாரிகளுக்கு அவர்
எழுதியிருப்பது உறுதியாயிற்று. கோபால ராவுக்குப் பிறகு காலேஜ்
பிரன்ஸிபாலாக ஸ்டூவர்ட்துரை என்பவர் வந்தார்.

சிந்தாமணி ஏட்டுப் பிரதிகள்

சேலம் இராமசுவாமி முதலியார் சென்னைக்குச் சென்று எனக்குக்
கடிதங்கள் எழுதினர். சீவகசிந்தாமணி ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்த
வேண்டுமென்று ஒவ்வொரு கடிதத்திலும் வற்புறுத்தினார். நான் அவ்வாறே
படித்து ஆராய்ந்து வருவதைத் தெரிவித்தேன். பவர்துரை பதிப்பித்த
சிந்தாமணி நாமகளிலம்பக அச்சுப்பிரதி ஒன்று எனக்குக் கிடைத்தது. தியாகராச
செட்டியாருக்கு நான் சிந்தாமணி படித்து வருவதைத் தெரிவித்தபோது அவர்
தம்மிடமிருந்த பிரதியை, திரு. பட்டாபிராம பிள்ளை மூலம் அனுப்பினர்.
அப்பிரதி பிள்ளையவர்களால் முதலில் எழுதப்பெற்றது. பொழிப்புரையும்
விசேடவுரையும் முற்றும் அதில் இருந்தன.

நான் சிந்தாமணி முழுவதையும் தனியே இரண்டு குறிப்புப்
புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டு ஆராய்ந்தேன். ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகர் திருநெல்வேலியிலிருந்து சில ஏட்டுப் பிரதிகளை வருவித்துக்
கொடுத்தார். எல்லாவற்றையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்துப் பாட
பேதங்களைக் குறித்துக் கொண்டேன். என்னிடம்