பக்கம் எண் :

548என் சரித்திரம்

வீட்டில் பாடம் கேட்பவர்களை வைத்துக் கொண்டு பிரதிகளை ஒப்பு
நோக்குவேன். காலேஜ் மாணாக்கர்களும் வந்து உதவி செய்வார்கள். ஒரே
சமயத்தில் நாலைந்து மாணாக்கர்கள் ஆளுக்கு ஒரு பிரதி வைத்துக் கொண்டு
பாட பேதம் பார்க்கும்போது வேலை மிகவும் வேகமாக நடைபெறும். அதில்
சிறிதும் சிரமமே தோற்றாது. பகலோ, இரவோ, ஏதாயிருந்தாலும் சலிப்பின்றி
ஆராய்ச்சி செய்து வந்தேன்.

தியாகராச செட்டியாரிடமிருந்து எனக்கு அடிக்கடி கடிதங்கள்
வந்துகொண்டே இருந்தன. அவர் பென்ஷன் பெறும் விஷயத்தில் சில
சிக்கல்கள் நேர்ந்தமையால் அதனைக் குறித்துப் பிரின்ஸிபாலிடமும்
மற்றவர்களிடமும் தெரிவித்துக் காரியம் நிறைவேறும்படி செய்ய
வேண்டுமென்று மிக்க கவலையோடு எழுதிவந்தார். நான் அதைப் பற்றிச்
சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி முயற்சி செய்தேன். செட்டியார்
வேலையை விட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகே அவருக்குப் பென்ஷன்
உத்தரவு கிடைத்தது.

திருக்குடந்தைப் புராணம்

பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களில் அச்சில் வராதவற்றை வெளியிட
வேண்டுமென்பது தியாகராச செட்டியாரது விருப்பம். முதலில் திருக்குடந்தைப்
புராணத்தை வெளியிடும் பொருட்டுக் கும்பகோணத்திலிருந்த சில
கனவான்களிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். அவர் திருவானைக்காவுக்குப்
போன பிறகு அதைப் பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்திக் கடிதம் எழுதினார்.
அதற்குப் பொருளுதவி செய்வதாகச் சொன்னவர்களை நான் அணுகிப் பணம்
வாங்கிச் செட்டியாருக்கு அனுப்பி வந்தேன். செட்டியார் முதலில் தஞ்சாவூர்
சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் சென்னையில் வைத்திருந்த அச்சுக்கூடத்தில்
அச்சிட ஏற்பாடு செய்து சிறிது முன்பணமும் கொடுத்திருந்தார். ஆனால் அது
நிறைவேறவில்லை. பிறகு சென்னையில் இருந்த சூளை சோமசுந்தர நாயகர்
அச்சிட்டு அனுப்புவதாக ஒப்புக் கொண்டமையால் அவருக்கே புராணப்
பிரதியை அனுப்பினார். அவ்வப்போது அவரிடமிருந்து ‘புரூப்’ செட்டியாருக்கு
வரும். அவருக்குக் கண் ஒளி குன்றி வந்தமையால் அதை அவர் பார்த்து
விட்டு எனக்கு அனுப்புவார். நான் அதைப் பார்த்துத் திருத்திச் சென்னைக்கு
அனுப்புவேன். புராணத்தை அச்சுக்கு ஸித்தம் செய்தவனும் நானே. மூலத்தை
மாத்திரம் ஒழுங்கு செய்து அச்சிட்டு வந்தோம். குறிப்புரையுடன்
வெளியிட்டால்தான் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்குமென்ற கருத்து
அப்போது எனக்கு எழவில்லை.