பக்கம் எண் :

564என் சரித்திரம்

சுருக்கமாக வசன நடையில் எழுதினால் அச்சிட்டு யாவருக்கும்
கொடுக்கலாம். அச்சிடும் செலவு முதலியவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்”
என்றார். தேசிகரும் அவ்வாறு செய்வது நலமென்று குறிப்பித்தார். நான்
எழுதுவதாக ஒப்புக்கொண்டேன்.

திருவிடைமருதூருக்கு ஞானக்கூத்தரென்பவரியற்றிய தமிழ்ப் புராணம்
ஒன்றும், கொட்டையூர் ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய புராணம் ஒன்றும்
உண்டு. சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய புராணத்தைப் படித்துக்
குறிப்பெடுத்துக் கொண்டு திருவிடை மருதூர் ஸ்தலமகாத்மியத்தை எழுதி
முடித்தேன். அதற்கு “ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம்” என்று பெயரிட்டு, மூர்த்தி,
தலம், தீர்த்தங்களின் சிறப்பும், வழிபட்டோர் வரலாறும் எழுதிச் சுப்பிரமணிய
தேசிகரிடத்தும் சுப்பிரமணியத் தம்பிரானிடத்தும் படித்துக் காட்டினேன். பிறகு
தம்பிரானது விருப்பத்தின்படி திருவிடைமருதூர் உத்ஸவ மூர்த்தியாகிய
ஏகநாயகர் விஷயமாக ஓர் ஊசலும் தாலாட்டும் இயற்றிச் சேர்த்தேன்.

எல்லாம் முடிந்தபிறகு தம்பிரான் அதனை எங்கே அச்சிடலாமென்று
யோசனை செய்தார். அதற்கு முன் கும்பகோண புராணமும், பூவாளூர்ப்
புராணமும் சென்னையில் அச்சிடப்பெற்ற விஷயம் அவருக்குத் தெரியும்.
ஆதலின் அங்கே அனுப்பி அச்சிட்டு வருவிக்கலாமென்று நான் சொன்னபோது
அவர், “புஸ்தகம் இப்போது பூர்த்தியாகி இருக்கிறது. இந்த வஸந்தோத்ஸவம்
ஸமீபத்தில் வருகிறது; அதற்குள் புஸ்தகம் அச்சாகி வந்தால் மிகவும்
உபயோகமாக இருக்கும். தபால் மூலமாக அச்சுக் காகிதங்கள் வருவதும்,
திருத்துவதுமாக இருந்தால் குறித்த காலத்தில் நிறைவேறுமென்று
தோற்றவில்லை. உங்களுக்கு இப்போது லீவு காலமாக இருப்பதால், நீங்களே
சிரமத்தைப் பாராமல் சென்னபட்டணம் சென்று நேரில் இருந்து காரியத்தை
முடித்துக் கொண்டு வரலாம். செலவு சிறிது அதிகமானாலும் காரியம் மிகவும்
உயர்ந்தது” என்றார். அவர் வார்த்தை கரும்பு தின்னக் கூலி தருவதாகச்
சொல்லுவது போல இருந்தது. அதுவரையில் சென்னையையே பார்த்திராத
எனக்கு அந்த நகரத்துக்குப் போய் ஆங்குள்ள அறிவாளிகளோடு பழக
வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. அன்றியும் சேலம் இராமசுவாமி
முதலியாரைக் கண்டு சில காலம் உடனிருந்து சிந்தாமணியைப் படித்துக் காட்ட
வேண்டுமென்ற ஆவலும் உண்டு. இவற்றை நிறைவேற்றிக் கொள்ளும்
பொருட்டு இந்தக் காரியம் ஏற்பட்டது நமது நல்லதிருஷ்டமே என்று நான்
எண்ணி, அவ்வாறே சென்று புஸ்தகத்தை அச்சிட்டுக் கொண்டு வருவதாக
ஒப்புக்கொண்டேன்.