பக்கம் எண் :

மூன்று லாபங்கள் 565

சென்னைப் பிரயாணம்

ஒரு நல்ல நாளில் புறப்பட்டு நான் என்பால் பாடங் கேட்டுக்
கொண்டிருந்த சிதம்பரம் சாமிநாதையர், சிதம்பரம் சோமசுந்தர முதலியார்
என்பவர்களுடன் சென்னைக்குச் சென்றேன். எனக்கு உதவி செய்வதற்கு வேறு
ஒரு மனிதரைச் சுப்பிரமணியத் தம்பிரான் அனுப்பினார். இராமசுவாமி
முதலியார் பங்களாவில் தங்கினேன்.

சென்னையில் ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்தில் நான் கொண்டு போன
புஸ்தகத்தை அச்சுக்குக் கொடுத்து அதைக்கவனித்துக் கொள்ளும்படி உடன்
வந்த இருவரிடமும் சொல்லிவிட்டுப் பெரும்பாலும் இராமசுவாமி முதலியாருடன்
இருந்து பொழுதுபோக்கி வந்தேன் சீவக சிந்தாமணியைப் பற்றிய செய்திகளை
நான் எடுத்துச் சொன்னபோது அவர் கேட்டு மிகவும் திருப்தி அடைந்தார்.
“எப்படியாவது அதை முடித்து வெளியிடுங்கள். இங்கே வந்திருந்து பதிப்பு
வேலையை நிறைவேற்றலாம். என்னாலான சகாயமெல்லாம் செய்கிறேன்”
என்றார். “அதை ஆரம்பிப்பதற்கு நீங்கள் காரணமாக இருந்தீர்கள்; பூர்த்தி
செய்வதற்கும் நீங்களே உதவி செய்ய வேண்டும்” என்று நான் சொன்னேன்.

இராமசுவாமி முதலியார் உதவி

சென்னையில் நான் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்தேன்.
மத்தியார்ச்சுன மான்மியம் பதிப்பிப்பதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு
சென்னைக்கு வந்தாலும், என்னுடைய நோக்கம் அந்நகரத்தையும் அங்குள்ள
அறிஞர்களையும் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டு மென்பதே. இராமசுவாமி
முதலியாருடைய பேருதவியால் அந்நோக்கம் மிக எளிதில் கைகூடியது.

ஒவ்வொரு நாளும் முதலியார் பிற்பகலில் தம் கோச்சு வண்டியில்
என்னை அழைத்துக் கொண்டு புறப்படுவார். பிரஸிடென்ஸி காலேஜ், காஸ்மொ
பாலிடன் கிளப் முதலிய இடங்களுக்குப் போய் அங்குள்ளவர்களும்
வருபவர்களுமாகிய கனவான்களில் ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம்
பண்ணி வைப்பார். அவர்கள் கௌரவத்தை எனக்கு எடுத்துரைப்பதோடு
என்னைப் பற்றியும் அவர்களிடம் சொல்வார். அவருடைய உதவியினால் நான்
ஜட்ஜ் முத்துசாமி ஐயர், ஸர். வி. பாஷ்யமையங்கார், ஸ்ரீநிவாச ராகவையங்கார்,
பம்மல் விஜயரங்க முதலியார், ரகுநாதராயர் முதலிய பல கனவான்களுடைய
பழக்கத்தைப் பெற்றேன். பிரஸிடென்ஸி காலேஜிற்குச் சென்று பூண்டி
அரங்கநாத முதலியாரையும், தொழுவூர் வேலாயுத முதலியாரையும் பார்த்தேன்.
அவ்விருவரும் எனக்கு மிகவும்