பக்கம் எண் :

566என் சரித்திரம்

நெருங்கிய நண்பர்களானார்கள், வர்னாகுலர் சூபரிண்டெண்டெண்டு
சேஷகிரி சாஸ்திரியாரையும் தமிழ்ப் பண்டிதர் கிருஷ்ணமாசாரியரையும் கண்டு
பேசினேன். புரசபாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோடசாவதானம்
சுப்பராய செட்டியார், கதிர்வேற்கவிராயர், காஞ்சீபுரம் இராமசுவாமிநாயுடு,
கோமளீசுவரன் பேட்டை இராசகோபாலபிள்ளை, சூளை அப்பன் செட்டியார்,
சூளை சோமசுந்தர நாயகர், திருமயிலை சண்முகம் பிள்ளை முதலிய
வித்துவான்களைப் பார்த்துப் பேசி இன்புற்றேன். அஷ்டாவதானம் சபாபதி
முதலியார் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடைய சகபாடியாதலின்
அவருடைய புலமையைப் பற்றிப் பேசினார். சோடசாவதானம் சுப்பராய
செட்டியார் தாம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்ட விஷயத்தையும்
அப்புலவர் பிரானுடைய சிறப்புக்களையும் எடுத்துச் சொன்னார். நான் கண்ட
வித்துவான்கள் பல பழைய பாடல்களைச் சொன்னார்கள். அவற்றைக் கேட்டுக்
குறித்துக் கொண்டேன். நானும் எனக்குத் தெரிந்த செய்யுட்களைச் சொன்னேன்.

சென்னை நகரத்தில் பார்க்க வேண்டிய பொருட்காட்சிச் சாலை,
கடற்கரை, கோயில்கள், புத்தகசாலைகள், சர்வகலாசாலை முதலியவற்றையும்
பார்த்தேன். வித்துவான்களையும் அறிஞர்களையும் பார்த்துப் பழகியது
கிடைத்தற்கரிய பெரிய லாபமாகத் தோன்றியது. சிறந்த உத்தியோக பதவியை
வகித்த பெரியவர்களெல்லாம் அடக்கமாகவும், அன்பாகவும் இருப்பதைக் கண்டு
நான் வியந்தேன். கும்பகோணத்தில் பதினைந்து அல்லது இருபது ரூபாய்
சம்பளம் பெறும் குமாஸ்தா செய்யும் அட்டகாஸத்தையும் ஆடம்பரத்தையும்
கண்ட எனக்கு அப்பெரியவர்களுடைய நிலை மிக்க ஆச்சரியத்தை
உண்டாக்கியது.

ஆதீனத்தின் புகழ்

ஒரு நாள் தங்கசாலை வீதியிலுள்ள காசிப்பாட்டி ஹோட்டலுக்குள்
சென்றேன். உள்ளே புகுந்ததும் அங்கிருந்த சிலர், “வாருங்கள், வாருங்கள்.
எங்கே இவ்வளவு தூரம் வந்தது?” என்று என்னை வரவேற்று உபசரித்தனர்.
‘இதென்ன இப்படி வரவேற்கிறார்களே; ஏதேனும் மோசம் இருக்குமோ! என்று
முதலில் நான் சந்தேகமடைந்தேன். அவர்களுடைய சரிகை அங்கவஸ்திரமும்
சவ்வாதுப் பொட்டும், பேச்சும் அவர்கள் சங்கீத வித்வான்களென்பதைப்
புலப்படுத்தின. நான் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த போதே ஒருவர்,
“திருவாவடுதுறையிலிருந்து எப்பொழுது