பக்கம் எண் :

568என் சரித்திரம்

ரோடு கலந்து கொண்டு அவரை இவ்விடத்திற்கு அனுப்ப வேண்டும்”
என்று அதில் எழுதியிருந்தார்.

நான் சென்னைக்கு வந்த நாள் முதல் அந்தக் குட்டித் தம்பிரான்
அடிக்கடி என்பால் வந்து உபசார வார்த்தைகளைப் பேசிக் செல்வார்.
அச்சுக்கூடத்திற்கும் அவர் இருந்த இடத்திற்கும் சமீபமாதலால் அவர் வந்து
என்னைப் பார்ப்பதற்கு அனுகூலமாக இருந்தது. அவரிடம் ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய உள்ளக் குறிப்பைத் தெரிவித்த போது அவர் மகிழ்ச்சியோடு
ஒப்புக் கொண்டார். சுப்பிரமணிய தேசிகருக்கு இவ்விஷயத்தை எழுதித்
தெரிவித்தேன். அவர் உடனே தம்பிரானைத் திருவாவடுதுறைக்கு அனுப்பி
வைக்க வேண்டுமென்று எழுதினார். அதன்படியே என்னுடன் வந்திருந்த
சிதம்பரம் சாமிநாதையரைத் துணையாகச் சேர்த்து அந்தக் குட்டித்
தம்பிரானைத் திருவாவடுதுறைக்கு அழைத்துப் போகும்படி செய்தேன்.

மத்தியார்ச்சுன மான்மியம் அச்சாகிக் கொண்டிருந்தது. இடையே
திடீரென்று ஒரு நாள் தியாகராச செட்டியார் கண் வைத்தியம் செய்து
கொள்வதற்காகத் தம் மனுஷ்யர்களுடன் சென்னைக்கு வந்து, நான் இருக்கும்
இராமசுவாமி முதலியார் பங்களாவில் சில நாள் தங்கினார். அப்பால் அவர்
தம்முடைய சகபாடியாகிய சுப்பராய செட்டியார் மூலமாக வேறு ஜாகை
ஏற்படுத்திக் கொண்டு அங்கே சென்று இருந்து வந்தார். நான் அவருடன்
இருந்து பேசியும், பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தும் அச்சு வேலையைக்
கவனித்தும் வந்தேன்.

சென்னையிலிருந்து திரும்பியது

புஸ்தகம் முடிந்தவுடன் புறப்பட்டுத் திருவிடைமருதூருக்குத்
திருக்கல்யாண தினத்தன்று சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் புஸ்தகப்
பிரதிகளை ஒப்பித்து நிகழ்ந்த விஷயங்களையும் சொன்னேன். எல்லாவற்றையும்
கேட்டு அவர் மிகவும் திருப்தியுற்று,

“சாமிநாதையர் பட்டணம் போய் வந்ததில் மூன்று லாபங்கள்
உண்டாயின. ஒன்று அவரைச் சேர்ந்தது. மற்ற இரண்டும் மடத்துக்கு இலாபம்.
பல பேர்களைப் பழக்கம் செய்து கொண்டது அவருக்கு நன்மை.
மத்தியார்ச்சுன மான்மியம் வெளி வந்ததும் குட்டித் தம்பிரானை வரச்
செய்ததும் மடத்துக்கு உபயோகமானவை” என்று பாராட்டினார்.

வஸந்தோத்ஸவம் மிகச் சிறப்பாக நடந்தது. மத்தியார்ச்சுன மான்மியம்
அச்சமயத்தில் யாவருக்கும் வழங்கப்பட்டது.