பக்கம் எண் :

இடையே வந்த கலக்கம் 569

அத்தியாயம்-94

இடையே வந்த கலக்கம்

அடிக்கடி ஆராய்ந்து வந்தமையால், என் நினைவு முழுவதும்
சிந்தாமணி மயமாக இருந்தது. அதில் என் மனம் ஆழ்ந்துவிட்டது. காலையில்
நான் எழுந்தவுடன் சிந்தாமணி முகத்தில்தான் விழிப்பேன். பல் தேய்த்து
அனுஷ்டானம் செய்தவுடன் ஆகாரம் பண்ணுவேனோ இல்லையோ
சிந்தாமணியை ஆராய்வேன். காலேஜிற்குப் போக நேரமாய்விடுமே யென்று
கருதமாட்டேன். காலேஜில் அடிக்கும் முதல் மணி என் காதில் விழுந்து
சிந்தாமணியிலிருந்து என் கருத்தை வலியப் பிடித்து இழுக்கும். அவசர
அவசரமாகச் சாப்பிட்டு விட்டுப் புறப்படுவேன். சில நாட்களில் சாப்பிடாமலே
போய்விடுவேன். காலேஜில் பாடம் சொல்லுகையில் இடையே எத்தனையோ
முறை சிந்தாமணியைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லுவேன். அவர்களின்
பலரை என் வீட்டுக்கு வரச் சொல்லிப் பாட பேதம் பார்க்கச் செய்தும்
குறிப்புக்களை எழுதச் செய்தும் சிந்தாமணித் தொண்டில் ஈடுபடுத்துவேன்.
பிற்பகலில் காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் சிந்தாமணியை
எடுத்துக்கொள்வேன். எங்கள் வீட்டுத் திண்ணையில் சிறிய கை
மேஜையின்மேல் பிரதியை வைத்துக் கொண்டு எத்தனையோ இரவுகள்
சிந்தாமணி ஆராய்ச்சியில் மனமொன்றியிருப்பேன். எனக்குச் சிந்தாமணியும்,
சிந்தாமணிக்கு நானும் துணையாகப் பொழுது போவதே தெரியாமல் ஆராய்ச்சி
நடைபெறும்.

காலேஜ் ஆசிரியர்களில் ஒருவர் ஓர் இரவு பன்னிரண்டு மணி வரையில்
ஒரு நண்பர் வீட்டில் சீட்டாடி விட்டு எங்கள் தெரு வழியே தம் வீட்டுக்குச்
சென்றார். எங்கும் இருள் சூழ்ந்த இரவில் வெளித் திண்ணையில் நான்
உட்கார்ந்திருந்ததைக் கண்டு வியப்புற்று, “என்னை இது? இன்னும்
உட்கார்ந்திருக்கிறீர்களே? நான் போகும் போதும் இப்படியே இருந்தீர்கள்;
இப்போதும் உட்கார்ந்திருக்கிறீர்களே?” என்றார். சுருக்கமாக விடை சொல்லி
நான் அவரை அனுப்பி விட்டேன்.

சிந்தாமணிப் பிரபஞ்சம்

அந்தத் தனிமையிலே திருத்தக்க தேவர் என்னை எங்கெல்லாமோ
அழைத்துச் செல்வார். இராசமாபுரத்துக் காட்சிகளைக் காட்டுவார். சச்சந்தனின்
அந்தப்புரத்துக்கு அழைத்துப் போவார். கட்டியங்காரனுடைய செயல்களை
எடுத்துச் சொல்லுவார்.