பக்கம் எண் :

584என் சரித்திரம்

W. H. Drew) ஒருவர் சிந்தாமணியைப் பதிப்பிப்பதாக ஒரு திட்டம்
வகுத்து அந்த முறையை விளக்கி ஒரு விளம்பரம் வெளியிட்டார். அவர் அதை
நிறைவேற்ற முடியவில்லை. போப் துரை பிறகு முயன்றார். அவராலும்
இயலவில்லை. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலருக்குக் கூடச்
சிந்தாமணியைப் பதிப்பிக்கும் எண்ணம் இருந்தது. திருச்சிற்றம்பலக்
கோவையாரின் முதற்பதிப்பில் ‘இனி வெளிவரும் நூல்கள்’ என்ற
விளம்பரத்தில் சிந்தாமணியின் பெயர் காணப்படுகிறது. என்ன காரணத்தாலோ
அவர் பதிப்பிக்க முற்படவில்லை. உங்கள் ஆசிரியராகிய மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களும் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும்
சேர்ந்து சிந்தாமணியைப் பதிப்பிக்கலாமென்று ஆலோசித்தார்களாம். பிறகு
அது பெரிய தொல்லை என்று நிறுத்தி விட்டார்களாம். இப்படி யார்
தொட்டாலும் நிறைவேறாத இந்த நூலை நீங்கள் பதிப்பிக்கத்
துணிந்தீர்களேயென்று அஞ்சுகிறேன்” என்று அந்தக் கிழவர் சொன்னார்.

ஆனால், அவருடைய வார்த்தைகளால் நான் சிறிதும் அதைரியம்
அடையவில்லை. “முன்பு அவர்கள் நிறைவேற்றவில்லை என்ற காரணத்துக்காக
நாம் நமது முயற்சியை நிறுத்திக்கொள்வதா? அவர்களெல்லாம்
முயன்றார்களென்ற செய்தியினாலே இந்த நூல் எப்படியாவது அச்சு வடிவத்தில்
வெளியாக வேண்டுமென்ற ஆவல் அவர்களுக்கு இருந்ததென்று
தெரியவில்லையா? அந்த விருப்பத்தை நிறைவேற்ற முயல்வது
மற்றவர்களுடைய கடமைதானே? என் முயற்சி தடைப்படினும்
குறைவொன்றுமில்லை. இறைவன் திருவருளால் இது பலித்தால்
தமிழன்பர்களுக்குச் சந்தோஷமுண்டாகாதா? ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய
வரையில் ஆராய்ந்து பதிப்பித்து வருகிறேன், குறைபாடுகள் இருப்பது இயல்பே.
அறிவுடையவர்கள் நாளடைவில் அவற்றைப் போக்கி விடுவார்கள்” என்று
உத்ஸாகத்தோடு கூறினேன்.

“நான் சொல்லுவதைச் சொல்லி விட்டேன். அப்பால் உங்கள் பிரியம்”
என்று அவர் அதிருப்தியோடே சம்பாஷணையை முடித்தார். நானும் விடை
பெற்று வந்தேன்.

‘ஏக்கழுத்தம்’

நாமகளிலம்பகம் 58-ஆம் செய்யுளில், “ஏத்தரு மயிற்குழா மிருந்த
போன்றவே” என்னும் அடிக்கு, ‘மேல் நோக்குதலைத் தருகின்ற மயிற்றிரள்
பொலிந்திருந்தனவற்றை யொத்த வென்க’ என்று நச்சினார்க்கினியர் உரை
யெழுதிவிட்டு, ‘ஏக்கழுத்தம் என்றார் பிறரும்’ என்று மேற்கோள் காட்டுகிறார்.
அந்தச் செய்யுளும்