பக்கம் எண் :

சிந்தாமணிப் பதிப்பு நிகழ்ச்சிகள் 585

உரையும் அச்சாகும்போது ‘ஏக்கழுத்தம்’ என்ற சொல் எங்கே
வந்துள்ளதென்று என் ஞாபகத்துக்கு வரவில்லை. அதை என் கைக் குறிப்புப்
புஸ்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். திடீரென்று ஒருநாள் சிறுபஞ்ச
மூலத்தில் ஒரு பாடல் ஞாபகத்துக்கு வந்தது.

“கல்லாதான் றான்காணு நுட்பமுங் காதிரண்டும்
இல்லாதா னெக்கழுத்தஞ் செய்தலும்”

என்பது அதன் முதற்பகுதி. அதில் வரும் எக்கழுத்தமென்ற
சொல்லுக்குத் தெளிவாகப் பொருள் விளங்கவில்லை. சிந்தாமணி உரையில்
வரும் மேற்கோள்கள் அவ்வளவும் என் ஞாபகத்தில் இருந்தன. இந்தச் சிறு
பஞ்சமூலச் செய்யுட்பகுதி நினைவுக்கு வந்த போது முன்னே குறிப்பித்த
‘ஏக்கழுத்தம்’ என்ற மேற்கோளும் ஞாபகத்துக்கு வந்தது. “காது இரண்டும்
இல்லாதவன் தலை யெடுத்துப் பார்த்தலும்” என்று சிறுபஞ்ச மூலத்துக்குப்
பொருள் செய்யலாமோ வென்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே சிறுபஞ்ச
மூலத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். நல்லார்கள் கேட்பின் நகையை
உண்டாக்கும் செய்திகளைத் தொகுத்துக் கூறவந்த சிறுபஞ்ச மூல ஆசிரியர்,
முதலில் கல்வியில்லாதவன் ஆராய்ச்சி செய்து காணும் நுட்பத்தைக் கூறிவிட்டு
அடுத்ததாக, “காதிரண்டும் இல்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும்” என்பதைக்
கூறுகிறார். நச்சினார்க்கினியர், ‘ஏக்கழுத்தம்’ என்னும் தொடரில் ஏ என்பதற்கு
மேல் நோக்குதல் என்று பொருள் செய்திருக்க வேண்டுமென்று தோன்றியது.
ஏக்கழுத்தமென்பதற்குக் கழுத்தை மேலே உயர்த்துதல் என்று பொருள்
செய்தால் சிறுபஞ்சமூலத்துக்குப் பொருள் விளக்கமாகும்.

ஒரு சங்கீத வினிகையைக் கேட்பதற்கு ஆடவரும் பெண்டிரும்
போயிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவன் செவிடு. சங்கீத வினிகை
நடைபெறுகையில் அவன் தலையைத் தூக்கி அசைக்கிறான். அவன்
செவிடென்று தெரிந்தவர்கள் சங்கீத இனிமையை மிக நன்றாக அனுபவிப்பதாக
அவன் காட்டிக்கொள்வதைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்களா? இந்தக் கருத்தை,
“காதிரண்டுமில்லாதா னேக்கழுத்தம் செய்தலும்” என்ற அடி
உணர்த்துகிறதென்று கண்டு கொண்டேன். சிறு பஞ்சமூலப் பதிப்பில்
எக்கழுத்தமென்ற பாடமே காணப்பட்டது.

நீதிநெறி விளக்கத்தில், “ஏக்கழுத்த மிக்குடைய மாகொல், பகை முகத்த
வெள்வேலான் பார்வையில் தீட்டும், நகை முகத்த
-----------------------------------------------------------------------------

இல்லாதாளென்றும் பாடம்