பக்கம் எண் :

586என் சரித்திரம்

நன்கு மதிப்பு” (39) என்று வீரச் சிறப்புடைய ஓர் அரசனது
பார்வையைக் குறிக்கிறார் குமரகுருபரர். அந்தச் செய்யுளிலும்
எக்கழுத்தமென்றே பதிப்பிக்கப் பெற்றிருந்தது.

பிறகு சிந்தாமணியில் காந்தருவதத்தையாரிலம்பகத்தை ஆராய்ந்து
வருகையில் நாலாவது பாட்டில் “ஏக்கழுத்தம்” என்ற சொல்லே வந்தது.
அங்கே நச்சினார்க்கினியர் தெளிவாக, ‘ஏக்கழுத்தம்-தலையெடுப்பு’ என்று
உரை எழுதியிருக்கிறார். அதற்கு மேல் வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
சிறுபஞ்சமூலச் செய்யுளையும் நீதிநெறி விளக்கச் செய்யுளையும் திருத்திக்
கொண்டேன். அப்போது சந்தோஷத்தால் எனக்குக் கூடச் சிறிது ‘ஏக்கழுத்தம்’
உண்டாயிற்று.

இந்தச் சந்தோஷம் தாங்க முடியாமல், “இன்றைக்கு ஒரு பதத்தின்
உண்மையான உருவத்தைக் கண்டு பிடித்தேன். நச்சினார்க்கினியர்
மகோபகாரியென்று எனக்கு வரவரத் தெரிகிறது” என்று சக்கரவர்த்தி
ராஜகோபாலாசாரியரிடம் சொன்னேன்.

“என்ன, அப்படி ஒரு புதிய தேசத்தைக் கண்டு பிடித்து விட்டீர்கள்?”
என்றார் அவர்.

“புதிய தேசத்தைக் கண்டுபிடித்தாற்கூட இவ்வளவு சந்தோஷமிராது”
என்று சொல்லி ஏக்கழுத்தத்தைப் பற்றிய கதையைச் சொன்னேன். அவர்
இந்தத் திருத்தத்தைத் தம் நண்பர்களாகிய சூளை அப்பன் செட்டியார்
முதலியவர்களிடம் தெரிவித்தார். கேட்டவர்கள் யாவரும் மிக மகிழ்ந்து
என்பால் வந்து என்னைப் பாராட்டினார்கள். இப்படியே உரையில் வரும்
செய்திகளை அறிந்து தெளிந்து பதிப்பிக்கும்போதும் மேற்கோள்களினால்
அறிந்த செய்திகளை வெளியிடும்போதும் வித்துவான்களெல்லாம் தங்கள்
தங்கள் சந்தோஷத்தைப் புலப்படுத்துவார்கள். அஷ்டாவதானம் சபாபதி
முதலியார் கூறிய வார்த்தைகளால் அதைரியம் அடையாமல் இருந்த எனக்கு
இந்தப் பாராட்டுக்கள் தைரியத்தை அளித்தன. “சிந்தாமணியைத் தெளிவாக
விளங்கும்படி பதிப்பிக்கப் போகிறோமோ இல்லையோ; பல காலமாக
விளங்காத விஷயங்கள் இம்மாதிரி சில விளங்கினாலும் போதும். அதையே
பெரிய லாபமாக எண்ணுவோமே” என்ற திருப்தியைப் பெற்றேன்.

பவர் துரையின் பிரதி

கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதரும், அஷ்டாவதானம் சபாபதி
முதலியார் மாணாக்கருமாகிய சின்னசாமி பிள்ளையென்பவரிடம் சிந்தாமணி
உரைப் பிரதியொன்று உள்ளதென்றும்,