பக்கம் எண் :

60என் சரித்திரம்

மிருகங்களையும் பறவைகளையும் போல எழுதுவேன்; அன்ன பட்சி
போலவும் யானை போலவும் வரைவேன். சில தெய்வங்களின் படங்களையும்
எழுதுவேன். எந்தக் கோயிலுக்குப் போனாலும் அங்கேயுள்ள சித்திரங்களில்
என் கருத்துச் செல்லும். ஒவ்வொன்றையும் கவனித்து ஆராய்வேன்.

இராத்திரி காலங்களில் எங்கள் ஊரில் நடைபெறும் புராணக்
கதைகளைக் கேட்பதனாலும், என் சிறிய தகப்பனாரது போதனையினாலும்
எனக்குச் சில புராண வரலாறுகள் தெரிந்தன. அந்த அறிவினால்
கோயிலிலுள்ள சித்திரங்களைக் கண்டு தெளிந்து இன்புறும் உணர்ச்சி
ஏற்பட்டது.

ஒரு சமயம் என் தந்தையார் என்னையும் என் தாயாரையும்
அழைத்துக்கொண்டு சுவாமிமலைக்குப் போனார். அங்கே கோயிலுக்குச் சென்று
ஸ்வாமி தரிசனம் செய்தோம். கோயிலில் பாவு கல்லிலே பல சித்திரங்கள்
அழகாக எழுதப் பெற்றிருந்தன. நானும் தந்தையாரும் பிறரும் அவற்றைக்
கவனித்து வந்தோம். ஒரு சித்திரத்தில் ஒரு பெரியவர் கை கட்டி வாய்
புதைத்து வணக்கக் குறிப்புடன் நின்றிருந்தார். அருகில் ஒரு குழந்தை
ஆசனத்தில் உட்கார்ந்திருந்தது. ‘இந்தப் படம் எதைக் குறிக்கின்றது?’ என்று
என் தகப்பனார் யோசித்தபடியே அதை உற்றுக் கவனித்தார். நான்,
‘சுப்பிரமணியசுவாமி பரமசிவனுக்கு உபதேம் செய்ததாக இருக்கலாமோ?”
என்று சொன்னேன். என் தகப்பனார் முகத்தில் சந்தோஷம் பொங்கியது;
என்னை எடுத்து அணைத்துக் கொண்டார். முருகக் கடவுள் சிவபெருமானுக்கு
உபதேசம் செய்த அவசரமே சுவாமி மலையில் உள்ள ஐதிஹ்யம்.

உத்தமதானபுரத்தில் இரண்டு நந்தவனங்கள் இருந்தன. நானும் வேறு
சில பிள்ளைகளும் அங்கே சென்று எங்கள் வீட்டுப் பூஜைக்குவேண்டிய பத்திர
புஷ்பங்களை எடுத்துவந்து கொடுப்போம்.

மாதாமகர் உபதேசம்

இடையிடையே என் தாயார் தம்முடைய பிறந்தகமாகிய சூரிய மூலைக்கு
என்னை அழைத்துச் சென்று வருவார். அப்போது இடை வழியில் என் பெரிய
தாயார் இருந்த தியாக சமுத்திரத்திலும், சிறிய தாயார் இருந்த கோட்டூரிலும்
தங்கிச் செல்வோம். சூரிய மூலையில் என் மாதாமகருடைய நித்திய
கர்மானுஷ்டானங்களையும் சிவ பூஜையையும் சாந்தமான இயல்பையும்
கவனித்தபோது எனக்கு