பக்கம் எண் :

622என் சரித்திரம்

அக்காலத்தில் திருவாவடுதுறையில் படித்துக் கொண்டிருந்த ம. வீ.
ராமானுஜாசாரியரைக் கண்டு, கிருஷ்ணையர் சென்னையிலிருந்து திரும்பி வந்து
ஸ்ரீரங்கம் வேலையை ஒப்புக் கொள்ளச் சில மாத காலமாவது ஆகுமென்றும்,
அதுவரையில் அவ்வேலையைப் பார்த்துவர வேண்டுமென்றும் கூறினேன்.
அவர் அவ்வாறே செய்வதாக உடம்பட்டு வேலையைப் பார்த்து வந்தார்.
சிந்தாமணி பூர்த்தியானவுடன் கிருஷ்ணையர் ஸ்ரீரங்கத்துக்குப் போய்
ராமானுஜாசாரியரிடமிருந்து அவ்வேலையை ஏற்றுக் கொண்டார். நான்
தியாகராச செட்டியாரைப் பார்க்கச் சென்ற காலத்தில் கிருஷ்ணையர்
ஸ்ரீரங்கத்தில் வேலை பார்த்து வந்தார்.

தியாகராச செட்டியாரது ஆனந்தம்

தஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட நான் திருச்சிராப்பள்ளி சென்று, இரவு
இரண்டு மணிக்கு உறையூரை அடைந்து, செட்டியாரிருந்த வீட்டுக்குப் போய்க்
கதவைத் தட்டினேன். என் குரலைக் கேட்டவுடன் செட்டியார் வேகமாக வந்து
கதவைத் திறந்து, “உன்னையே நினைத்துப் படுத்திருக்கிறேன்” என்று சொல்லி
என்னைக் கட்டிக் கொண்டார். வழக்கமாக ‘நீங்க’ ளென்று அழைத்து வந்த
அவர், அப்போது ‘உன்னை’ என்று சொன்னதும், அவ்வளவு வேகமாக வந்து
கட்டிக் கொண்டதும் அவருடைய அன்பு கரை கடந்து பொங்கியதற்கு
அடையாளங்களாக இருந்தன. சம்பிரதாயம், மரியாதை, கௌரவம் எல்லாம்
அன்பும் அன்பும் சந்திக்குமிடத்தில் மறைந்து விடுகின்றன.

“சாயங்காலம் திருவாவடுதுறை வித்துவான் *ஆறுமுகச்சாமியும்
கிருஷ்ண ஐயரும் வந்தார்கள். சிந்தாமணிப் புஸ்தகத்தைக் காட்டினார்கள். கண்
தெரியாமையால் கையில் எடுத்துப் பார்த்தேன். கனமாக இருந்தது. பிரித்து
முதலிலிருந்து படிக்கச் சொல்லிக் கேட்டேன்.

“என்ன வேலை செய்திருக்கிறீர்கள்! முகவுரை முதலியவை மிக அழகாக
அமைந்திருக்கின்றன. நான் முன்பு நாமகளிலம்பகத்தோடு
போராடினவனாதலால் புஸ்தகத்தின் அருமை எனக்கு நன்றாகத் தெரியும்.
இவ்வளவு சக்தி உங்களுக்கு எங்கிருந்து வந்ததென்று ஆச்சரியப் பட்டுக்
கொண்டே இருக்கிறேன். ஐயா அவர்கள் இருந்தால் எவ்வளவு சந்தோஷ
மடைவார்கள் தெரியுமா? அவர்களுக்கும்
-----------------------------------------------------------------------------

*இவர் திருவானைக்கா மடத்தில் இருந்தார். பிறகு குன்றக்குடி ஆதீனத்
தலைவராக இருந்து விளங்கினார்.