நான் சென்னைக்குப் புறப்படும் போது “நல்ல வேனையில் புறப் படவேண்டும்” என்று அவர் சொல்லியனுப்பியது ஞாபகத்திற்கு வந்தது. நல்ல வேளையிற் புறப்பட்டதாகத்தான் முன்பு எண்ணினேன். ஆனால் அந்தச் சமயத்திலோ அந்த வேளை மிகப் பொல்லாத வேளையென்று எண்ணும்படி ஆகிவிட்டது. “நல்வேளை தனிற்சென்னை நகர்க்கேகப் புறப்படென நவின்றே யென்னை ஒல்வேளை தனில்விடுத்தாய் அவ்வேளை நினைப்பிரிய உஞற்றும் தீய அல்வேளை யென்பதனை அறியாது பிரிந்து துய ரடைந்தே னந்தோ வில்வேளை வென்றபெரு விறலுடைச்சுப் பிரமணிய விமல வாழ்வே.” [உஞற்றும்-செய்யும். வேளை வென்ற பெருவிறல்-மன்மதனைத் துறவொழுக்கத்தால் வென்ற வீரம்.] இவ்வாறு வேறு சில விருத்தங்களைப் பாடினேன்; சில வெண் பாக்களையும் சில கண்ணிகளையும் இயற்றினேன். அவற்றுள் இரண்டு கண்ணிகள் வருமாறு:- “தெய்வத் தமிழின் செழுஞ்சுவையைப் பாராட்டும் சைவக் கொழுந்தின் சபைகாண்ப தெந்நாளோ?” “இன்றிரப்பார் வந்தா ரிலரென் றியம்புகுணக் குன்றின்மொழி கேட்டுவகை கூருநாள் எந்நாளோ?” அந்தப் பாடல்களை வைத்துக்கொண்டு தனிமையிலே வருந்தினேன். என் துரதிருஷ்டத்தை நினைத்து நொந்து கொண்டேன். அன்று இரவே புறப்பட்டு உடன்வந்த சிலருடன் நேரே திருவாவடுதுறையை அடைந்தேன். அங்கே நான் விரும்பிய பொருளைக் காண முடியுமா? தேசிகர் நிற்கும் இடம், இருக்குமிடம், பாடம் சொல்லும் இடம் முதலிய இடங்களையெல்லாம் போய்ப் பார்த்தேன். அங்கே அவருடைய உருவம் இருப்பதாகப் பிரமை கொண்டேன். காணாமல் மயங்கினேன். புதிய தலைவர் புதிய தலைவர் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் என்னும் திருநாமத்தோடு பதினேழாம் பட்டத்து ஆதீனத் தலைவராக விளங்கினார். அவர் என்பால் அன்போடு பேசி ஆறுதல் கூறினார். என்னுடைய |