பக்கம் எண் :

632என் சரித்திரம்

துயரம் ஆற்றுவிப்பார் முயற்சிக்கு அப்பாலதாக இருந்தது.
திருவாவடுதுறையில் எல்லாம் இருந்தன. ஒரு தலைவர் போனார்; ஆனால்
வேறொரு தலைவர் வந்துவிட்டார். சமாதியடைந்த தலைவருக்குக் குரு
பூஜையும் புதிய தலைவருக்குச் சிறப்பும் நடைபெற்றன. அப்போது அந்த ஊர்
திருவிழாக் கோலத்திலே இருந்தது.

ஆனாலும் சுப்பிரமணிய தேசிகருடைய குணங்களிலே ஈடுபட்டவர்கள்
உள்ளத்தில் துக்கந்தான் நிரம்பியிருந்தது. அவர்கள் சம்பிரதாயத்திற்காக
உடம்பைச் சுமந்துகொண்டு அங்கும் இங்கும் போய் வந்து கொண்டிருந்தனர்.

குரு பூஜை

முறைப்படி சுப்பிரமணிய தேசிகருடைய சமாதிக்கு ஒவ்வொரு நாளும்
பூஜை நடைபெற்றது. இறுதி நாளன்று விசேஷமான பூஜை நிகழ்ந்தது. அதன்
பொருட்டுப் பல ஊர்களிலிருந்து மடத்தைச் சேர்ந்த அடியார்கள்
வந்திருந்தனர். திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து நூற்றுக்கணக்கான பிரபுக்களும்
வித்துவான்களும் வந்தார்கள். அவர்களோடு சம்பாஷித்துக் கொண்டிருந்தேன்.

திருநெல்வேலியில் திருவாவடுதுறை மடத்துச் சிஷ்யர்கள் பலர் உண்டு.
அவர்களுள் மிகமுக்கியமானவராகிய அம்பலவாண கவிராயரென்பவரது
பரம்பரையிற் பிறந்தவர்களாகிய கவிராச நெல்லையப்பப் பிள்ளை, கவிராச
ஈசுவர மூர்த்தியா பிள்ளை என்று இரண்டு கனவான்கள் உண்டு.
இளையவராகிய கவிராச ஈசுவர மூர்த்தியா பிள்ளையென்பவர் அப்போது குரு
பூஜைக்கு வந்திருந்தார். சிந்தாமணிப் பதிப்புக்கு உதவியாக அவர் வீட்டு
ஏட்டுப் பிரதி எனக்குக் கிடைத்தது. பத்துப் பாட்டு பிரதியும் கிடைக்கலாமென்ற
நோக்கத்தால், அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “சிந்தாமணிப்
பதிப்புக்குத் தங்கள் பிரதி உபயோகமாக இருந்தது. இப்போது பத்துப்
பாட்டைப் பதிப்பிக்க உத்தேசித்திருக்கிறேன். ஸந்நிதானம் இருந்தால்
எவ்வளவோ அனுகூலமாக இருக்கும். துரதிருஷ்டவசத்தால் அவர்களை இழந்து
விட்டோம். உங்களைப் போன்ற அன்பர்கள் ஆதரவு எனக்கு அதிகமாக
வேண்டும். பழைய தமிழ் நூலாராய்ச்சி மிகவும் சிரமத்தைத் தருகிறது. பத்துப்
பாட்டு ஏட்டுப் புஸ்தகங்கள் இன்னும் சில கிடைத்தால் நலமாக இருக்கும்.
திருநெல்வேலிக்கு வந்து தங்கள் வீட்டு ஏடுகளைப் பார்க்க எண்ணி
யிருக்கிறேன். அதற்கு அனுமதி அளிப்பதோடு தங்களைச் சேர்ந்த மற்ற
வித்துவான்கள் வீட்டிலுள்ள ஏடுகளையும் பார்ப்பதற்கு உதவி செய்ய
வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன். எந்தச் சமயத்தில் வந்தாலும் உதவி
புரிவதாக அவர் வாக்களித்தார்.