''திருநெல்வேலிப் பிரயாணம் படியென்றுஞ் சுவையொழுகப் பாடென்று மெனக்கன்பிற் பகர்வோர் யாரே மிடியென்று மெனையகலச் செயுந்தியாக ராசனெனும் மேன்மையோனே துடியொன்று மொருகரத்தா னடியென்று மறவாத தூய்மை யோனே” என்பது ஒன்று. செட்டியாரிடம் படித்தவர்களும் அவருடைய பெருமையை உணர்ந்தவர்களும் மிக வருந்தினார்கள். பலர் எனக்குக் கடிதம் எழுதித் தங்கள் துயரத்தைத் தெரிவித்தனர். செட்டியாருடைய மாணாக்கரும் கோயம்புத்தூர்க் காலேஜ் தமிழ்ப் பண்டிதருமான சபாபதி பிள்ளை என்பவர் பல பாடல்கள் பாடினார். அவற்றுள், “பொய்யடையாத சிராமலைத் தியாக புரவலன்சீர் மெய்யடை நாவலர் முன்புவி நாட்டி விரும்பெமரைப் பையடை காக்குடந் தைச்சாமி நாதையன் பக்கலிலே கையடை யாக்கி யகன்றா னிதுநல்ல காரியமே.” என்ற பாட்டில் அவர் என்னையும் குறிப்பித்திருக்கிறார். [எமரை - எம்மவர்களை. பையடைகா - பசுமையைப்பெற்ற சோலை. கையடை - அடைக்கலம்.] சுப்பிரமணிய தேசிகர், தியாகராச செட்டியார் என்னும் இருவர் பிரிவும் என்னை வருத்தினாலும் பத்துப் பாட்டு ஆராய்ச்சியை நிறுத்தவே இல்லை. அந்தத் துக்கத்தை ஆராய்ச்சியினால் மறக்க எண்ணினேன். இன்னும் ஏட்டுப் பிரதிகள் இருந்தால் நல்ல பாடம் கிடைக்குமென்ற எண்ணம் உண்டாகும். அச்சமயங்களில் சுப்பிரமணிய தேசிகர் இருந்தால் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பல ஏட்டுச் சுவடிகளை வருவித்துக் கொடுப்பாரென்ற நினைவும் கூடவே வரும். நல்ல பகுதிகளைக் காணும் போதெல்லாம் தியாகராச செட்டியார் கேட்டால் அளவில்லாத மகிழ்ச்சி கொள்வாரே என்ற ஞாபகம் உண்டாகும். புறப்பாடு பத்துப் பாட்டில் விஷயம் தெரியாமல் பொருள் தெரியாமல் முடிவு தெரியாமல் மயங்கிய போதெல்லாம் இந்த வேலையை நிறுத்தி விடலாமென்ற சலிப்புத் தோற்றும். ஆனால் அடுத்த கணமே ஓர் அருமையான விஷயம் புதிதாகக் கண்ணிற் படும்போது, அத்தகைய விஷயங்கள் சிலவாக இருந்தாலும் அவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கலாமே என்ற எண்ணம் உண்டாகும். |