பக்கம் எண் :

பத்துப்பாட்டின் நல்ல பிரதிகள் 645

அப்போது தஞ்சாவூரில் இருந்தார். நல்ல குணமும் தமிழில் அன்பும்
உடையவர்.

அவர் திருநெல்வேலிக்குச் சென்ற பிறகு எனக்கு, “நான் இவ்வூருக்கு
வந்திருக்கிறேன். இந்தப் பக்கங்களில் தமிழ் வித்துவான்கள் இடங்கள் பல
இருக்கின்றன. அங்கே ஏட்டுச் சுவடிகள் கிடைக்கும். உங்கள் ஆராய்ச்சிக்கு
அவை வேண்டுமானால் என்னாலான உபகாரம் செய்வேன்” என்று
எழுதியதோடு அங்கிருந்து வந்த கனவானிடமும் சொல்லியனுப்பினார். நான்
முதலில் திருநெல்வேலிக்குச் சென்றபோது அவர் வெளியூருக்குப் போயிருந்த
மையால் அவரைப் பார்க்கவில்லை. ஆதலால் இரண்டாமுறை புறப்பட
எண்ணிய போது என் வரவைப் பற்றி அவருக்கும் ஒரு கடிதம் எழுதினேன்.

என் கடிதங்களைப் பெற்ற நண்பர்கள் யாவரும் மகிழ்ச்சியோடு விடை
எழுதினர். கனகசபை முதலியார் மாத்திரம் எழுதவில்லை. அவர்
வெளியூருக்குப் போயிருப்பாரென்றும் போய்ப் பார்த்துக் கொள்ளலாமென்றும்
எண்ணினேன்.

ஆவணியவிட்ட விடுமுறை தொடங்கியவுடன் கும்பகோணத்திலிருந்து
புறப்பட்டு மறுநாட் காலையில் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன். முதலில்
கனகசபை முதலியாரைப் பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி இராமல்
அவர், “நான் வேறொருவருக்கு ஏடு தேடிக் கொடுக்கும் விஷயத்தில் சகாயம்
செய்வதாகச் சொல்லி விட்டேன். அதனால் தங்களுக்கு இவ்விஷயத்தில்
இப்போது ஒன்றும் செய்ய முடியவில்லையே யென்று வருத்தமடைகிறேன்”
என்று சொல்லிவிட்டார்.

ஆழ்வார் திருநகரி

அப்பால் கைலாசபுரத்தில் வக்கீலாக இருந்த என் நண்பர் ஸ்ரீமான் ஏ.
கிருஷ்ணசாமி ஐயரவர்களைப் பார்த்து நான் வந்த காரியத்தைத் தெரிவித்தேன்.
அவர், “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று அபயமளித்தார்.
பிறகு ஸ்ரீ வைகுண்டம் வக்கீல் ஈ. சுப்பையா முதலியாரவர்களுக்கு ஒரு கடிதம்
கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு ஸ்ரீ வைகுண்டம் சென்றேன்.
முதலியாரவர்கள் மிக்க அன்புடன் ஆழ்வார் திருநகரிக்கு அழைத்துச்
சென்றார்கள். போகும்போது வெள்ளூரில் சில கவிராயர்கள் வீடுகளில் உள்ள
ஏடுகளைப் பார்த்தேன். பத்துப்பாட்டு அகப்படவில்லை. ஆழ்வார் திருநகரியில்
என் நண்பர்களையும் பார்த்தேன். அவர்கள் யாவரும் முயன்று கவிராயர்கள்
வீடு