பக்கம் எண் :

646என் சரித்திரம்

களிலுள்ள ஏடுகளையெல்லாம் நான் பார்க்கும்படியான நிலையில்
செய்வித்திருந்தார்கள். முதலில் லக்ஷூமண கவிராயர் என்பவர் வீட்டிற்குப்
போனேன். அவர் சிறந்த வித்துவானாகிய தீராதவினை தீர்த்த திருமேனி
கவிராயரென்பவருடைய பரம்பரையினர். அவர் வீட்டில் ஆயிரக்கணக்கான
சுவடிகள் இருந்தன. மூன்று நாட்கள் இருந்து தேடியும் நான் தேடிவந்த
பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை. பிறகு பல கவிராயர்கள் வீடுகளில்
தேடினேன். ஒரு வீட்டிலும் அது கிடைக்கவில்லை. அதனால் என் மனம் மிக்க
சோர்வையடைந்தது. அப்போது லட்சுமண கவிராயர் என் நிலைமையைக்
கண்டு, “ஒரு விஷயம் மறந்துவிட்டேன். இங்கே என் மாமனார் இருக்கிறார்.
என் வேலைக்காரன் என் வீட்டிலிருந்த சில சுவடிகளை அவரிடம்
கொடுத்துவிட்டான். அவரிடம் நீங்கள் தேடும் புத்தகம் இருக்கிறதா? என்று
பார்க்கலாம்” என்றார். எங்ஙனமாவது முயன்று கிடைக்கும்படிசெய்ய
வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் ஒருநாள் இரவு
ஆலயத்தில் விசேஷமாதலால் நான் இருந்த வீதிவழியே பெருமாளும்
சடகோபாழ்வாரும் எழுந்தருளினார்கள். அப்போது நம்மாழ்வார்
திருக்கோலத்தைத் தரிசித்து நான் வந்த காரியத்தை நிறைவேற்றுவிக்க
வேண்டுமென்று மிகவும் பிரார்த்தித்துக் கொண்டேன். பிறகு என்
நண்பர்களுடன் நான் ஆகாரம் செய்துகொண்ட வீட்டுத் திண்ணையில்
உட்கார்ந்தேன். நிலா ஒளி நன்றாக வீசியது. அப்போது லக்ஷூமண கவிராயர்
மிகவும் வேகமாக நாங்கள் இருந்த இடம் வந்து, “இந்தப் புத்தகத்தைப்
பாருங்கள். இந்த ஒன்று தான் என் மாமனாரிடம் உள்ளது. பார்த்துவிட்டுத்
திருப்பியனுப்பிவிடுவதாக வாங்கி வந்திருக்கிறேன்” என்று ஒரு சுவடியை
என்னிடம் கொடுத்தார். எனக்கிருந்த ஆவலினாலும் வேகத்தினாலும் நிலா
வெளிச்சத்திலேயே அதைப் பிரித்துப் பார்த்தேன். சட்டென்று ”முல்லைப்
பாட்டு” என்ற பெயர் என் கண்ணிற் பட்டது. அப்போது எனக்கு உண்டான
சந்தோஷத்திற்கு எல்லையில்லை. மிக விரைவாக முதலிலிருந்து திருப்பித்
திருப்பித் பார்த்தேன். திருமுருகாற்றுப்படை முதல் ஏழு பாட்டுக்கள்
வரிசையாக இருந்தன. ஆழ்வாரைப் பிரார்த்தித்தது வீண்போகவில்லையென்று
பக்கத்திலிருந்தவர்களிடம் சொன்னேன். அன்றிரவு முழுவதும் சந்தோஷத்தால்
தூக்கம் வரவில்லை. மறுநாள் அந்த ஏட்டுப்
-----------------------------------------------------------------------------

இந்த முறை ஏடுதேடும் விஷயத்தில் எனக்கு ஏற்பட்ட துன்பங்களையும்
கவலையையும் ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்ற தலைப்புடன் கலைமகள்
பத்திரிகையில் விரிவாக எழுதியிருக்கிறேன். நான் வெளியிட்டிருக்கும்
நல்லுரைக் கோவை இரண்டாம் பாகத்திலும் பதிப்பித்திருக்கிறேன். அந்த
விவரங்களை விரிவஞ்சி இங்கே சுருக்கமாக எழுதியுள்ளேன்.