பக்கம் எண் :

650என் சரித்திரம்

பழமையும் பெருமையும் உடைய தருமபுர ஆதீனத்தின் ஞாபகம்
வந்தது. அதுகாறும் தருமபுர மடத்திலுள்ள ஏடுகளைத் தேடிப் பார்க்கும்
சந்தர்ப்பம் எனக்கு நேரவில்லை. அப்போது இரண்டு இடங்களுக்கும் இடையே
இருந்த சிறிது மனஸ்தாபத்தால் திருவாவடுதுறை மடத்தின் சார்புடைய நான்
தருமபுர மடத்திற்குச் செல்வதைச் சிலர் தவறாக நினைத்தல் கூடுமென்று
முதலில் எண்ணினேன்.

பல வித்துவான்கள் இருந்து விளங்கிய தருமபுர ஆதீனத்து ஏடுகளை
ஆராய்ந்தால் பத்துப் பாட்டுப் பிரதி கிடைக்கலாமென்ற ஆசை எனக்குத்
தோற்றியது. தமிழாராய்ச்சி விஷயத்தில் இந்தச் சம்பிராதயங்களையெல்லாம்
பார்த்துக் கொண்டிருந்தால் எடுத்த காரியம் நிறைவேறாமற் போகுமென்ற
கருத்தால், திருவாவடுதுறைக்குச் சென்று ஆதீனத் தலைவரிடம் தருமபுர
மடத்திற்குப் போய் ஏடு தேடவேண்டுமென்ற என் விருப்பத்தை
வெளியிட்டேன். அம்பலவாண தேசிகர் அப்படியே செய்யலாமென்று அனுமதி
அளித்ததோடு வண்டியையும், உடன் செல்லும்படி பொன்னுசாமி
செட்டியாரையும் அனுப்பினார்.

குறை நிரம்பியது

அதிருஷ்டம் என் பங்கில் இருந்தது. நான் தருமபுர மடாலயத்திற்குச்
சென்று ஆதீனத் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகதேசிகரைக் கண்டு
அவர் அனுமதி பெற்று அங்கிருந்த ஏடுகளைத் தேடினேன். நான் தேடிய
பொருள் கிடைத்தது. அங்கே மிகப்பழையதாகிய பத்துப்பாட்டின் ஒற்றை
ஏடுகள் சில அகப்பட்டன. அவற்றால் குறிஞ்சிப் பாட்டிற் குறையாக இருந்த
பகுதி பூர்த்தியாயிற்று. நான்கு மலர்களின் பெயர்கள் விடுபட்டுப்
போயினவென்று தெரியவந்தது. குறை நிரம்பப் பெற்ற சந்தோஷத்தோடு என்
நன்றியறிவைத் தெரிவித்து அவ்வேடுகளைப் பெற்றுக் கும்பகோணம் வந்து
சேர்ந்தேன். தருமபுரத்தில் பல நூல்களைக் கண்டேன். ஒட்டக்கூட்டர் இயற்றிய
தக்கயாகப்பரணி மூலமும் உரையும் உள்ள பிரதி ஒன்று இருந்தது. அப்போது
அதில் என் கவனம் செல்லாமையால் அதனை எடுத்துக் கொள்ளவில்லை.

பத்துப்பாட்டு மூலம் இல்லாத குறை மாத்திரம் நிரம்பாமலே இருந்தது.
சென்னையில் உள்ள அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலையில் ஒரு
பத்துப் பாட்டுப் பிரதி இருந்தது அதனைப் பிரதி பண்ணச் செய்து
வருவித்தேன். அதில் இரண்டு பாட்டுக்களின்

கலைமகளில் வெளிவந்த ‘உதிர்ந்த மலர்கள்’ என்ற கட்டுரையில்
இவ்வரலாற்றின் விரிவைக் காணலாம். (நல்லுரைக் கோவை-IV)