பக்கம் எண் :

நல்ல சகுனம் 649

கூச்செறிந்தது. மிக்க வேகமாக ஆதீனத் தலைவரை அணுகி
உட்கார்ந்தேன். உடனே பொன்னுசாமி செட்டியார் ஏட்டுச் சுவடியைக்
கொணர்ந்து என் கையில் கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். பத்துப்
பாட்டுக்களும் இருந்தன. மூலமும் உரையும் கலந்ததாகவே இருந்தது அப்பிரதி.
பத்துப் பாட்டு முழுவதும் இருந்தமையால் எனக்கு அளவற்ற சந்தோஷம்
உண்டாயிற்று. ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து வந்தேன். ஒவ்வொரு பாட்டாகத்
திருப்புகையில் என் உள்ளம் குதூகலித்தது. அதில், தூத்துக்குடிக் கால்டுவெல்
காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த குமாரசாமிப் பிள்ளையால், வீரபாண்டிய
கவிராயர் பிரதியைப் பார்த்து எழுதப்பட்டதென்று எழுதியிருந்தது.

“இந்தப் பிரதி எங்கிருந்து கிடைத்தது?” என்ற வியப்போடு ஆதீனத்
தலைவரை வினவினேன்.

“திருச்செந்தூர் மடத்தில் வீரபாகு பிள்ளையென்பவர் காரியஸ்தராக
இருக்கிறார்; நல்ல திறமையுள்ளவர். அவர் வாங்கி அனுப்பினார்” என்று அவர்
சொன்னார். அந்தப் பிரதியைப் பெற்றுக்கொண்டு கும்பகோணம் வந்து என்
கைப் பிரதியோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பல பிழைகள் திருந்தின.
மூலமில்லையே என்ற குறை ஒருபால் இருப்பினும் பத்துப் பாட்டுக்களுமுள்ள
திருத்தமான பிரதி கிடைத்ததே போதுமென்ற திருப்தியோடு மேற்கொண்டு
பதிப்புக்குப் பிரதியைச் சித்தம் செய்யலானேன்.

குறிஞ்சியில் குறை

இடையில் வேறொரு தடை நேர்ந்தது. குறிஞ்சிப் பாட்டில் ஒரிடத்தில்
ஒரு பகுதி விட்டுப் போயிருந்தது. எல்லாப் பிரதிகளிலும் அதே குறை
காணப்பட்டது. எவ்வளவு அடிகள் அங்கே இருக்க வேண்டுமென்பதை நிச்சயம்
செய்து கொள்ள முடியவில்லை பொருளின் தொடர்ச்சியைப் பார்க்கையில்
சிறுபகுதியாக இருக்கலாமென்றே தோற்றியது பல மலர்களின் பெயர்கள்
வரிசையாகச் சொல்லப் பெறும் இடம் இது. முன்னும் பின்னும் மலர்களுடைய
பெயர்கள் வருகின்றன. இடையில் சில மலர்களின் பெயர்கள் அமைந்த
பகுதியே காணப்படவில்லை. வீரபாண்டியக் கவிராயர் ஏடு கிடைத்ததனால்
உண்டான மகிழ்ச்சி இந்தக் குறையால் ஓரளவு குறைந்தது.

தொடங்கியது முதல் இடைஞ்சல்களையே அனுபவித்துத் துயருற்றதனால்
நான் ஓய்ந்து ஒன்றும் தோன்றாமல் இருந்தேன். அப்போது சைவ
ஆதீனங்களில் திருவாவடுதுறையைப் போன்ற