பக்கம் எண் :

648என் சரித்திரம்

அவ்வீட்டுத் தலைவராகிய கவிராயர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால்
நான் ஒரு புத்தகமும் எடுத்துக்கொள்ளாமல் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

கிடைத்த பிரதிகளையெல்லாம் வைத்துக்கொண்டு பத்துப் பாட்டை
ஆராயத் தொடங்கினேன். சிலவற்றில் பத்துப் பாட்டுக்களும் இல்லை.
சிலவற்றில் இடையிடையே சில பகுதிகள் இல்லை. சிலவற்றில் பிழைகள்
மலிந்திருந்தன. ஒன்றிலேனும் தனியே மூலம் இல்லை. திருத்தமான பிரதி
எங்கே கிடைக்குமென்ற கவலையில் மூழ்கியிருந்தேன்.

வீரபாண்டியக் கவிராயர் பிரதி

எப்பொழுதும்போல் ஒரு முறை திருவாவடுதுறைக்குச் சென்றிருந்த
போது ஆதீனத் தலைவராகிய அம்பலவாண தேசிகரிடம் பத்துப் பாட்டுக்காக
நான் செய்த யாத்திரைகளைப் பற்றி விரிவாகச் சொல்லிவிட்டு, “இவ்வளவு
சிரமப்பட்டும் முற்றும் உள்ள திருத்தமான பிரதி கிடைக்கவில்லை.
ஆதீனத்தைச் சார்ந்த இடங்களில் எங்கேனும் கிடைத்தால் வாங்கி
அனுப்பும்படி காரியஸ்தர்களுக்கு ஸந்நிதானம் உத்தரவிட்டால் அனுகூலமாக
இருக்கும்” என்று தெரிவித்துக் கொண்டேன். என்னுடைய மன நலிவைக்
கண்ட தேசிகர், “சிறிதும் கவலைப்பட வேண்டாம். ஆதீனத்தைச் சார்ந்த
இடங்கள் பல இருக்கின்றன. எல்லோருக்கும் எழுதச் சொல்லி எப்படியாவது
பத்துப் பாட்டுப் பிரதியை வருவித்துக் கொடுப் போம்” என்று தைரியம்
கூறினார்,

“கிடைத்தால் நல்லது” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றேன்.

இரண்டு வாரங்களுக்குப் பின் திருவாவடுதுறையிலிருந்து எனக்கு ஒரு
கடிதம் வந்தது. “தென்னாட்டுக் காரியஸ்தர்களுக்கெல்லாம் ஸந்நிதானத்தில்
எழுதியிருக்கிறது. அனுகூலமான செய்தி கிடைக்கும்; கவலைப்படவேண்டாம்”
என்று மடத்து ராயஸம் பொன்னுசாமி செட்டியார் அதில் எழுதியிருந்தார்.
அடுத்த வாரமே நான் என்னவாயிற்றென்று விசாரிப்பதற்காகத் திருவாவடுதுறை
சென்றேன். மடத்திற்குள் புகுந்து ஒடுக்கத்தின் வாயிலில் கால் வைக்கும்போதே
ஆதீனத் தலைவர் என் காதில் படும்படி, “பொன்னுசாமி செட்டியார்! பத்துப்
பாட்டைக் கொண்டுவந்து ஐயரவர்களிடம் கொடும்” என்று உத்தரவிட்டார்.
அந்த வார்த்தைகள் என் காதில் விழுந்த போது என் உடம்பெல்லாம் மயிர்க்