பக்கம் எண் :

கண்டனப் புயல் 653

தலைதூக்கத் தொடங்கின. பிறரைக் கண்டிப்பதிலே இன்பங்காணும் சிலர்
சீவக சிந்தாமணிப் பதிப்பைப்பற்றிப் பல வகையான கண்டனங்களைக் கூறியும்
எழுதியும் அச்சிட்டும் வெளிப்படுத்தலாயினர். அவர் கூறிய பிழைகளில்
உண்மையில் பிழைகளாகக் கருதப்படுவனவும் சில உண்டு. ஆனாலும்
அவர்களுடைய நோக்கம் பிழை திருந்தவேண்டுமென்பதன்று; எப்படியாவது
கண்டனம் செய்து என் மதிப்பைக் குறைக்க வேண்டுமென்பதே, கண்டனத்தின்
முறையும் நடையும் அவர்களுடைய உள்ளக் கொதிப்பைக் காட்டினவேயன்றித்
தமிழன்பை வெளிப்படுத்தவில்லை. இத்தகைய கூட்டத்தார் உலகத்தில் எந்தக்
காலத்திலும் உண்டு.

பிழையும் திருத்தமும்

சிந்தாமணியை வெளியிட்ட காலத்தில் தமிழ்நாட்டில் அத்தகைய
நூற்பயிற்சி எவ்வளவு மங்கியிருந்ததென்பதைத் தமிழுலகு நன்கு அறியும்.
அப்போது மிகவும் சிரமப்பட்டுச் செய்த ஒரு காரியத்தில் பிழைகள் இருப்பது
இயல்பே. நூற்பதிப்பு விஷயத்தில் வரவரப் பாடங்கள் திருந்துவதும், உண்மைப்
பொருள் தெளிவாவதும், புதிய புதிய செய்திகள் புலப்படுவதும் புதியனவல்ல.
எடுத்த எடுப்பிலே முற்றத் திருந்திய பதிப்பை வெளியிடுவதென்பது இயலாத
காரியம். என் முதற் பதிப்புக்களில் அமைந்திருந்த பல பிழைகளைப்
பிற்காலத்தில் நானே திருத்திப் பதிப்பித்திருக்கிறேன். புதிய புதிய ஆராய்ச்சி
செய்யும்போது கிடைக்கும் அறிவால் பல காலமாகத் திருந்தாத செய்திகள்
திருந்தியதுமுண்டு.

“அறிதோ றறியாமை கண்டற்றால்”

என்று திருவள்ளுவர் கூறியது பொய்யாகுமா?

சிந்தாமணிப் பதிப்பில் என் அறியாமையால் சில பிழைகள்
அமைந்ததுண்டு. திருத்தக்கதேவர் மதுரைக்குச் சென்று சங்கவித்துவான்களைக்
கண்டனரென்று முதற் பதிப்பில் எழுதியிருக்கிறேன். இது தவறென்று பிறகு
தெரிய வந்தது. ஜைன சங்கத்தைச் சார்ந்தவர்களை அவர் கண்டாரென்ற
உண்மையைப் பிற்கால ஆராய்ச்சியால் அறிந்து கொண்டேன். இப்படியே
நூற்பெயர்கள், புலவர் பெயர்கள் முதலிய பலவற்றில் பிழையான
உருவங்களைச் சிந்தாமணி முதற் பதிப்பிற் காணலாம். அவற்றை நாளடைவில்
திருத்திக் கொண்டேன். இன்று இருக்கும் ஒரு பாடம் நாளைக் கிடைக்கும்
புதிய பாடத்தால் பிழையாக நேர்வதும் உண்டு. மனிதன் சிற்றறிவால்
ஆராய்ந்து அமைக்கும் ஒன்றை எப்படி முடிந்த முடிபென்று கொள்ள முடியும்?