பக்கம் எண் :

658என் சரித்திரம்

சிலர் கடிதங்கள்

ஒரு வகையாகக் கண்டனப் புயலினின்றும் ஒதுங்கிக் கொண்டேன்.
பத்துப்பாட்டில் மனம் தீவிரமாகச் செல்லலாயிற்று. ஆனாலும் அங்கங்கே
இருந்த நண்பர்கள் கண்டனக்காரர்களுடைய இயல்பைக் கண்டித்து எனக்குக்
கடிதம் எழுதினர். சிலர் தாங்கள் அவற்றைக் கண்டித்துப் பத்திரிகையில்
எழுதுவதாகத் தெரிவித்தனர். பூவை கலியாணசுந்தர முதலியார் முதலியவர்கள்
இவ்வாறு எனக்கு எழுதினர். நான் “கண்டனங்களுக்குச் சமாதானம் எழுத
வேண்டாம்” என்று தெரிவித்தேன்.

சென்னையிலிருந்த தி.த.கனகசுந்தரம் பிள்ளையிடமிருந்து 12-11-1888ஆம்
தேதி யன்று ஒரு கடிதம் வந்தது. பத்துப்பாட்டு விஷயத்தில் அவருக்கும்
எனக்கும் போட்டியிருந்தும் அவர் எழுதிய கடிதத்திற் கண்ட விஷயங்கள்
எனக்கு ஆறுதலையும் வியப்பையும் அளித்தன.

“. . . . .சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப்பிரகரணம் என்னுமொரு
துண்டுப் புத்தகமுங் கைக்கெட்டியது. அதை வாசித்த போதே எழுதியோருடைய
கருத்து நன்கு புலப்பட்டதாயினும், அவர் கூற்றினுஞ்
சிறிதுண்மையிருக்கலாமென்ற ஐயப்பாட்டோடு என்னுடைய சிந்தாமணி
எழுத்துப் பிரதியை எடுத்து ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். பார்த்தபோது அம்ம!
ஒன்றும் அவர் கூறியபடியின்றித் தங்கள் பாடம் போன்றே யிருக்கக் கண்டேன்.
அது நான் செய்த, பாவந்தான்போலும். . . அவர் முறைமையோடு
கூடாமையாலும், மனப் புழுக்கத்தோடு தெழித்துரைக்கின்றமையானும்
அறிவுடையாரைத் தமக்குப் புறம்பாக்கிக் கொண்டன ரென்பதே என்னுடைய
துணிபு. . . “ என்பது அக்கடிதத்தின் ஒரு பகுதி.

அவர்கள் அனைவரும் சேர்ந்து செய்த கண்டனத்தால் விளைந்த
மனவருத்தம் இந்த ஒரு கடிதத்தாலே நீங்கி விட்டதென்றே சொல்லலாம்.

புயல் வேறு திக்கில் திரும்பியது

கண்டனக்காரர்கள் என் மௌனத்தைக் கண்டு சலித்துப் போயினர்.
என்னுடன் இருந்து உதவி செய்து வந்த குடவாயில் சண்முகம்பிள்ளை நான்
எவ்வளவு சொல்லியும் கேளாமல் கண்டனக்