பக்கம் எண் :

சிலப்பதிகார ஆராய்ச்சி 665

சொன்னேன். அவர் மிக்க திருப்தியோடு ஏற்றுக்கொண்டார். ஒரு நாள்
திருவனந்தபுரம் காலேஜ் புரொபஸர் சுந்தரம் பிள்ளையைச் சந்தித்துப்
பேசினேன். அவர் தாம் இயற்றிய மனோன்மணீயமென்னும் நாடகத்திற் பல
பகுதிகளைக் காஸ்மொபாலிடன் கிளப்பில் அரங்கநாத முதலியாரிடமும்
என்னிடமும் படித்துக் காட்டினார்.

பதிப்பு நிறைவேறியது

பத்துப் பாட்டின் பெருமையை உணர்ந்த இராஜகோபாலாசாரியார்
அதிலுள்ள அரும் பதங்களையும், அருந் தொடர்களையும் தொகுத்து
அகராதியாக வெளியிடலாமென்று சொல்லி அகராதி செய்யக் கருவியாகவுள்ள
பெட்டி ஒன்றைக் கொணர்ந்து அகராதி செய்யும் முறையைக் காட்டினார்.
மிகவும் சுலபமாக அகராதி முடிந்ததைப் பார்த்து அந்தப் பெட்டியைப்போல
இரண்டு செய்து வைத்துக்கொண்டேன். அது முதல் அகராதி செய்வதென்பது
சிறிதும் சிரமமில்லாத காரியமாகி விட்டது.

இறைவன் திருவருளால் 1889-ஆம் வருஷம் ஜூன் மாதத்தில் பத்துப்
பாட்டு அச்சிட்டு நிறைவேறியது. ஆறே மாதத்தில் அந்த நூல் பூர்த்தியானது
பற்றி எனக்கு உண்டான திருப்திக்கு அளவில்லை.

அத்தியாயம்-109

சிலப்பதிகார ஆராய்ச்சி

பத்துப் பாட்டின் பதிப்பில் ஆரம்பத்தில் முகவுரையும் அப்பால் நூலின்
மூலமும் நச்சினார்க்கினியருரையும் உரைச்சிறப்புப் பாயிரமும் அரும்பத
விளக்கம் அருந்தொடர் விளக்கம் பிழை திருத்தம் என்பனவும் இருந்தன.

பத்துப் பாட்டு முகவுரை

முகவுரையில் பத்துப் பாட்டின் பொதுச் சிறப்பையும், ஒவ்வொரு
பாட்டின் வரலாற்றையும், ஏடுதேடிய விவரத்தையும், உதவி செய்தோர்
பெயர்களையும் எழுதினேன். அடுத்தபடியாகச் சிலப்பதிகாரம் வெளியிட
எண்ணியதை, “இக்காலத்தே மிக அருகி