பக்கம் எண் :

அரியிலூர் ஞாபகங்கள் 67

கோயில், விசுவநாதஸ்வாமி கோயில். சஞ்சீவிராயன் கோயில், காளிங்க
நர்த்தனர் கோயில், அனுமார் கோயில், முதலிய வேறு கோயில்களும்
இவ்வூரில் இருக்கின்றன. என் இளமையில் இவ்வளவு கோயில்களிலும்
ஜனங்கள் ஈடுபட்டு வழிபட்டு வந்தனர்.

இந்த ஊரில் அந்தணர்களில் வைஷ்ணவர்கள் ஸ்மார்த்தர்கள்
மாத்வர்கள் என்னும் மூன்று மதத்தினரும் வாழ்ந்தனர். ஸ்மார்த்தர்களில்
எங்கள் உறவினர் பலர் உண்டு. வேறு சாதியினரும் தங்கள் தங்களுக்குரிய
இடங்களில் வசித்தனர். கார்காத்த வேளாளச் செல்வர்கள் இவ்வூரில் அதிகமாக
இருந்தனர். அவர்கள் தெய்வ பக்தியும் பரோபகார சிந்தையும் மிகுதியாக
உடையவர்கள். கோயில்களில் நித்திய நைமித்திகங்கள் அரண்மனை யாருடைய
ஆதரவில் முன்பு நடந்து வந்தன நாளடைவில் ஜமீன்தாரது செல்வநிலை
குறையவே அவ்வேளாளச் செல்வர்கள் அக் கடமையை மேற்கொண்டனர்.

காலை நேரத்தில் குறிஞ்சான் குளத்துக்குப் போய்ப் பார்த்தால்
கார்காத்த வேளாளச் செல்வர்களாகிய ஆடவரும் பெண்டிரும் நீராடிவிட்டுத்
தூய்மையே உருவாக அமர்ந்து பூஜை செய்வதையும் தியானம் செய்து
கொண்டிருப்பதையும் காணலாம். அப் பக்கங்களில் அத்வைத சாஸ்திரப்
பயிற்சி அதிகமாகப் பரவியிருந்தது. பல துறவிகள் அங்கங்கே மடம் அமைத்து
வேதாந்த சாஸ்திரங்களைப் பாடஞ் சொல்லியும் தியானம் செய்தும்
அடக்கமாகக் காலங்கழித்து வந்தனர். அவர்களுடைய முகத்திலுள்ள
தெளிவிலிருந்தே உள்ளத்திலுள்ள அமைதியை அறிந்து கொள்ளலாம்.

அரியிலூரில் சில நந்தவனங்களும் இருந்தன. அங்கங்கே சில சிறு
காடுகள் உண்டு. அந்தக் காட்சிகள் என் கண்களுக்கு விருந்தாக இருக்கும்.
காவிரி நீர் பாய்ந்து வளம் பெருக்கும் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள
வயல்களையும் வரப்புகளையும் பார்க்கும் போதுகூட எனக்கு அந்தப் பழைய
சந்தோஷம் உண்டாவதில்லை. என் இளமைக் காலத்திற் கண்ட
அக்காட்சிகளைத்தான் என் உள்ளத்துக்குள் உயர்வாகப் போற்றி வருகிறேன்.

கிருஷ்ண வாத்தியார்

அரியிலூருக்குச் சென்ற பிறகு கிருஷ்ண வாத்தியார் என்பவரிடம்
முதலிற் படித்தேன். அவர் பெருமாள் கோவிலுக்கு வடக்கேயுள்ள வேளாளத்
தெருவில் இருக்கும் பிள்ளையார்