பக்கம் எண் :

670என் சரித்திரம்

சென்னைக் கிறிஸ்டின் காலேஜ் பத்திரிகையில் ஒரு மதிப்புரை
எழுதினார். இவற்றால் தமிழன்பர்களுக்குப் பத்துப் பாட்டினிடம் மதிப்பு
உண்டாயிற்று. பலர் மேலும்மேலும் அத்தகைய பண்டைத் தமிழ் நூல்களை
வெளியிட வேண்டுமென்று வற்புறுத்தி எழுதலாயினர். அன்பர்களுடைய
பாராட்டினால் உண்டான சந்தோஷத்தில் சிலப்பதிகார ஆராய்ச்சியைத்
தொடங்கியமையால் மனம் மிக வேகமாகச் சென்றது. ஆனால் ஏட்டுப்பிரதிகள்
அவ்வூக்கத்துக்கு அனுகூலமாக இல்லை முதல் முதலாக எனக்குச் சேலம்
இராமசுவாமி முதலியார் சிலப்பதிகாரம் மூலமும் உரையுமடங்கிய கடிதப் பிரதி
ஒன்று கொடுத்தார். அதன் பின்பு பிள்ளையவர்களுடைய மூலப் பிரதி ஒன்றும்
உரைப் பிரதி ஒன்றும் கிடைத்தன. தியாகராச செட்டியார் வைத்திருந்த பிரதி
ஒன்று என்னிடம் இருந்தது. இவற்றோடு வேறு சில பிரதிகளும்
வைத்திருந்தேன். இவ்வளவு இருந்தும் என் ஆராய்ச்சி தடைப்படுவதற்குப் பல
காரணங்கள் இருந்தன.

சிலப்பதிகார உரைகள்

கிடைத்த ஏடுகள் அவ்வளவையும் சோதித்துப் பார்த்தேன். அடியார்க்கு
நல்லார் உரை ஒரு பெரிய சமுத்திரமாக இருந்தது. இயலிசை நாடகம் என்னும்
முத்தமிழிலுமுள்ள பல நூல்களையும் மணியிலக்கணம், யோகம் முதலிய கலை
நூல்களையும் அவர் அங்கங்கே மேற்கோள் காட்டுகிறார்.
நச்சினார்க்கினியரிடம் காணப்படாத ஒரு நல்ல குணத்தை அடியார்க்கு
நல்லாரிடம் கண்டேன். மேற்கோள் காட்டும் நூலின் பெயரையும், சில
இடங்களில் அதைப் பற்றிய வரலாற்றையும் அவர் எடுத்துச் சொல்லுகிறார்.
சீவகசிந்தாமணி உரையிலும் பத்துப் பாட்டு உரையிலும் ‘என்றார் பிறரும்’ என்
பதைக் கண்டு அந்தப் பிறர் யாரென்று தேடித் தேடி ஆராய்ந்து
கிடைத்தவற்றைத் தெரிந்து கொள்வதற்காக நான் பட்ட சிரமம் இவ்வளவென்று
சொல்ல முடியாது. அந்தச்சிரமத்தை அடியார்க்கு நல்லார் வைக்கவில்லை.
இந்தப் பெரிய உபகாரத்தின் அருமையை ஆராய்ச்சி செய்வோர் நன்கு
அறிவர்.

சிலப்பதிகாரத்தில் முப்பது காதைகள் உள்ளன. அவற்றுள் ஏழாவதாகிய
கானல் வரிக்கும், இருபதாவது பிரிவாகிய வழக்குரை காதை முதலிய
பதினொன்றுக்கும் அடியார்க்கு நல்லார் உரை கிடைக்க வில்லை.
சிலப்பதிகாரம் முழுவதற்கும் அரும்பதவுரை ஒன்று உண்டு. அதன் பிரதி
ஒன்றை என் நண்பர் தேரழுந்தூர் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியர்
கொடுத்தார். அது மிகவும் பழுதுபட்டிருந்தது. அடியார்க்கு நல்லாருரைக்கு அது
முற்பட்ட