பக்கம் எண் :

672என் சரித்திரம்

அக்காலத்தில் பொ. குமாரசாமி முதலியார் தம்முடைய குமாரரைப்
படிப்பிக்கும் பொருட்டு லண்டனுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து அவர்
எனக்குக் கடிதம் எழுதினார். அங்கே சில காலம் இருந்து பிரான்சு, ஜெர்மனி
முதலிய தேசங்களைப் பார்த்துக் கொண்ட வர உத்தேசித்திருப்பதாகவும்
அங்கே பல சிறந்த புத்தக சாலைகள் உண்டென்றும் இந்தியாவிலிருந்த சென்ற
பல ஏட்டுச் சுவடிகள் அவற்றிலுள்ளனவென்று தெரிவதாகவும் அவர் அதில்
தெரிவித்தார் நான் உடனே சிலப்பதிகாரம் இருக்கிறதா என்று ஆராயவேண்டு
மென்று பதில் எழுதினேன்.

சேலம் இராமசுவாமி முதலியாரிடமிருந்து அனுகூலமானவிடை வந்தது.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிலப்பதிகார நூல் சம்பந்தமான யாத்திரையைத்
தொடங்கிச் சேலத்துக்குப் புறப்பட்டேன்.

அத்தியாயம்-110

பயனற்ற பிரயாணம்

சேலத்துக்குப் புறப்பட்டுச் செல்லுகையில் திருச்சிராப் பள்ளியில் இறங்கி
அங்கே சில இடங்களில் ஏடு தேடலானேன். திரு. பட்டாபிராம பிள்ளையின்
உதவியால் சிலவித்துவான்களுடைய வீடுகளுக்குச் சென்று பார்த்தேன். எஸ். பி.
ஜி . காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த அண்ணாசாமிபிள்ளை
என்பவரிடத்தில் புறத்திரட்டும் வீர சோழிய உரைப் பிரதியும் இருந்தன. வீர
சோழியச் சுவடியில் அச்சுப் புத்தகத்தில் இல்லாத சில பகுதிகள் காணப்
பட்டன.

புறத்திரட்டு

முதலில் ஏடு தேடுகையில் அச்சிட்ட புத்தகங்களின் ஏடுகளாக
இருந்தால் அவற்றை அதிகமாகக் கவனிப்பதில்லை. நாளடைவில் செய்து வந்த
ஆராய்ச்சியால் அச்சிட்ட புத்தகங்களிலுள்ள பிழைகளைத் திருத்திக்
கொள்வதற்கும், நல்ல பாடங்களைத் தெரிந்து கொள்ளுவதற்கும் ஏட்டுப்
பிரதிகள் மிக்க உதவியாக இருப்பதை உணர்ந்தேன். ஆதலின் அது முதல்
அச்சிட்டவற்றின் ஏட்டுப் பிரதிகள் கிடைக்குமேல் அவற்றையும்
பொன்னேபோலப் போற்றி ஆராய்ச்சி செய்யும் வழக்கத்தை மேற்கொண்டேன்.
அண்ணாசாமி பிள்ளையிடமிருந்து அப்போது புறத்திரட்டை மாத்திரம் பெற்றுக்
கொண்டேன்.