பக்கம் எண் :

680என் சரித்திரம்

பிரதியில் உரை குறையாகவே இருந்தது. அப்பால் திருப்பாற்கடனாதன்
கவிராயர் வீட்டுக்கும் பிறகு பாளையங்கோட்டையில் சில இடங்களுக்கும்
போய்ப் பார்த்தேன். சிலப்பதிகாரம் கிடைக்கவில்லை. ஸ்ரீவைகுண்டம் முதலிய
இடங்களுக்குச் செல்ல எண்ணினேன். பெருங்குளமென்னும் ஊரில் செங்கோல்
மடம் என்ற ஆதீனமொன்று இருக்கிறதென்றும் அதன் தலைவர் தமிழ்ப்
பயிற்சியுள்ளவரென்றும் தெரிந்தது. அங்கே போய்ப் பார்க்கவும் கருதினேன்.
என் கருத்தை யறிந்த என் நண்பராகிய வக்கீல் ஏ. கிருஷ்ணசாமி ஐயர் அந்த
மடாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார்.

ஸ்ரீவைகுண்டம்

முதலில் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கவிராயர் வீட்டுக்குச் சென்றேன்.
அங்கே எண்பது பிராயமுள்ள வைகுந்தநாதன் கவிராயரென்பவர்
உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது பல பழைய தமிழ்ப்
பாடல்களைச் சொன்னார். பிறகு நான் ஏடு தேட வந்திருப்பதை அவரிடம்
சொல்லி அவர் வீட்டில் உள்ள ஏடுகளைப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக்
கொண்டேன். அந்த முதியவர் சிரித்தபடியே, “இந்தக் காலத்தில் ஏட்டுச்
சுவடிகளைத் தேடுபவர்களும் இருக்கிறார்களா? இங்கிலீஷ் படிப்பு வந்த பிறகு
தமிழை யார் கவனிக்கிறார்கள்? தமிழ் ஏடுகளை யார் பாதுகாக்கிறார்கள்?
எல்லாம் அச்சுப் புத்தகங்களாக வந்து விட்டனவே” என்றார்.

“அச்சுப் புத்தகங்கள் எப்படி வந்தன? ஏட்டுச் சுவடிகளை உங்களைப்
போன்றவர்கள் பாதுகாத்து வைத்திருந்தமையால் அவற்றைப் பார்த்து
அச்சிடுகிறார்கள். உங்கள் வீட்டிலுள்ள ஏடுகளைப் பார்க்கும்படி அனுமதி
செய்யவேண்டும்” என்று கேட்டேன்.

“என்னிடம் பழைய ஏட்டுச் சுவடிகள் பல இருந்தன. என் பிள்ளைகள்
இங்கிலீஷ் படித்து உத்தியோகத்துக்குப் போய் விட்டார்கள். இனிமேல் இந்த
ஏடுகளை யார் காப்பாற்றப் போகிறார்களென்ற எண்ணத்தால் யார் யார் எது
எதைக் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் கொடுத்து விட்டேன்.”

“நாம் அப்பொழுதே வராமற் போனோமே” என்று இரங்கினேன்.
கிழவர் தாம் படிப்பதற்காக வைத்திருந்த சில ஏட்டு சுவடிகளை எடுத்துக்
காட்டினார். எனக்கு வேண்டியது ஒன்றும் கிடைக்கவில்லை.