பக்கம் எண் :

686என் சரித்திரம்

காட்டிலும் கயிறுதான் அவர்களுக்குப் பெரிதாகப் பட்டது கணக்குச்
சுருணைகளும் கம்பராமாயண ஏடுகளும் கலந்திருந்தன. அவற்றில் என்
கண்ணிற்பட்ட கம்ப ராமாயண ஒற்றை ஏடுகளை மாத்திரம் பெற்றுக்
கொண்டேன்.

களக்காடு

நாங்குனேரியிலிருந்து களக்காட்டை அடைந்தேன். அங்கே இரண்டு
சைவ மடங்கள் உண்டு. அவற்றுள் தெற்கு மடத்திற்குப் போய்ப் பார்த்தேன்.
அதன் தலைவராகிய சாமிநாத தேசிகரென்பவர் கல்வியிலும் குணத்திலும்
சிறந்தவராக இருந்தார். நான் வந்த காரியத்தைத் தெரிந்து கொண்ட அவர்
உடனே தாம் சுவடிகள் வைத்திருந்த மரப் பத்தாயத்தில் ஏணி வைத்து ஏறி
அங்கிருந்த சுவடிகளையெல்லாம் எடுத்துப் போட்டார். இரண்டு நாட்கள்
இருந்து எல்லாவற்றையும் பார்த்தேன். பல பிரபந்தங்களும், புராணங்களும்,
ஸம்ஸ்கிருத புத்தகங்களும் இருந்தன. சிலவற்றிற்குப் பெயர் இல்லாமல்
இருந்தது. நான் பெயர் எழுதி வைத்தேன்.

பத்துப் பாட்டு மூலம் முழுவதும் அடங்கிய பழைய பிரதி அங்கே
கிடைத்தது. ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினேன். “இதற்காக நான் எவ்வளவு
அலைந்திருக்கிறேன்! முன்பே கிடைத்திருந்தால் எவ்வளவு அனுகூலமாக
இருந்திருக்கும்! இரண்டாவது பதிப்புக்கு இதை உபயோகித்துக் கொள்வேன்”
என்று கூறி அதைப் பெற்றுக் கொண்டேன்.

அதைப் பெற்ற சந்தோஷத்தால் மூன்றாவது நாளும் அங்கே
இருந்தேன். அன்று அங்கே உள்ள ஆலயத்துக்குச் சென்று சத்தியவாகீச
ரென்னும் திருநாமத்தையுடைய மூர்த்தியைத் தரிசித்தேன். மகா மண்டபத்தில்
21 கதிர்கள் உள்ள தூண்கள் இருந்தன. அந்த 21 கதிர்களையும் ஒருவர்
தட்டினார். மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே
உண்டாவதைக் கேட்டு வியந்தேன். ‘கல்லை மென் கனியாக்கும் விச்சை’ என்று
மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். அங்கே கல்லை மென்னரம்பாக்கும் விச்சைத்
திறத்தைக் கண்டு மிக்க உவகை கொண்டேன். வீரமார்த்தாண்ட
பாண்டியரென்பவர் திருப்பணி செய்த ஆலயம் அது என்று சொன்னார்கள்.

பிறகு, கிடைத்த சுவடிகளை எடுத்துக் கொண்டு திருநெல்வேலி
வழியாகக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.