பக்கம் எண் :

தமிழ்க் கோயில் 687

அத்தியாயம்-112

தமிழ்க் கோயில்

கும்பகோணத்திற்கு வந்தவுடன் எனக்குக் கிடைத்த சிலப்பதிகாரப்
பிரதிகளையெல்லாம் வைத்துக் கொண்டு ஆராய்ந்தேன். அதன் மூலம்,
அடியார்க்கு நல்லார் உரை, அரும்பதவுரை என்னும் மூன்றையும் தனித்தனியே
ஊன்றிப் படித்து ஒழுங்கு படுத்தலானேன். அந்த மூன்றினுள் அரும்பதவுரை
மிகவும் சிதைந்த உருவத்தில் இருந்தமையால் அதனை உருவாக்கிப் படிப்ப
தென்பது சாத்தியமாக இல்லை. அடியார்க்கு நல்லார் அவ்வுரையைச் சில
இடங்களில் எடுத்துக் காட்டுவதனால் அதில் மதிப்பு உண்டாயிற்றேயன்றி
எனக்குக் கிடைத்த பிரதியினால் உண்டாகவில்லை. ஆயினும் பொறுமையோடு
கவனித்த பொழுது சில சில இடங்களில் அடியார்க்கு நல்லாருரையிற்
காணப்படாத சில அரிய விஷயங்கள் இருந்தன. அவற்றைக் கண்ட பிறகு
அரும்பதவுரையைப் பின்னும் ஊன்றிப் படிக்கத் தொடங்கினேன்.

இசை நாடகச் செய்திகள்

சிலப்பதிகாரத்தில் இசை நாடக சம்பந்தமான பல செய்திகள்
வருகின்றன. அவற்றை ஒழுங்கு படுத்த முயலும்போது அடியார்க்கு நல்லார்
மேற்கோளாகக் காட்டும் செய்யுட்களும் சூத்திரங்களும் மிக்க வியப்பை
உண்டாக்கின. சச்சபுட வெண்பா, தாள சமுத்திரம், சுத்தாநந்தப் பிரசாதம்
என்னும் நூல்கள் எனக்குக் கிடைத்தன. அவற்றையும் ஆராய்ந்தேன். மகா
வைத்திய நாதையரையும் அவர் தமையனாராகிய வையை இராமசுவாமி
ஐயரையும் சந்தித்த காலங்களில் சிலப்பதிகாரத்திலும் மேலே சொன்ன மூன்று
நூல்களிலும் வரும் சங்கீத விஷயங்களை அவர்களிடம் சொல்லிக் காட்டுவேன்.
அவர்களால் சில ஐயங்கள் நீங்கின. “தமிழில் இவ்வளவு சங்கீத சாஸ்திரங்கள்
உள்ளனவா!” என்று அவர்கள் விம்மிதமடைந்தார்கள். கும்பகோணத்தில் பரத
நாட்டியக் கலைப் பயிற்சியையுடைய நடேச தீக்ஷிதரென்று ஒருவர் இருந்தார்.
அபிநயம், கை வகைகள் முதலியவற்றைப் பற்றிய செய்திகள் சிலவற்றை
அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவ்வூரிலேயே பரத சாஸ்திரத்திற்
கரைகண்டவராக இருந்த ராயர் ஒருவரிடமிருந்து பல செய்திகளை அறிந்தேன்.
சில நட்டுவர்களை