அணுகி அவர்கள் முகமாகப் பல விஷயங்களை உணர்ந்தேன். அவர்கள் விஷயங்களை எடுத்துச் சொல்லும் போது, “இந்தக் கலைகளையும் இவற்றின் இலக்கணத்தைப் புலப்படுத்தும் நூல்களையும் தமிழ் நாட்டினர் போற்றிப் பாதுகாவாமற் போனார்களே!” என்று இரங்குவேன். நான் இவ்வளவு முயன்றும் சிலப்பதிகார உரையில் வரும் செய்திகள் ஓரளவு விளங்கினவே யன்றி முற்றும் தெளிவாக விளங்கவில்லை. யோக சம்பந்தமான விஷயங்கள் முதலியவற்றைக் கும்பகோணம் தாசில்தாராக இருந்த ஐயாசாமி சாஸ்திரிகளென்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். புரொபஸர் ஜூலியன் வின்ஸோன் சிலப்பதிகார ஆராய்ச்சி நடக்கையில் 1891-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பாரிஸிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. நான் பதிப்பித்த சீவகசிந்தாமணியைக் கண்டு அநத் நகரத்தில் தமிழாசிரியராக இருந்த ஜூலியன் வின்ஸோன் என்னும் பிரஞ்சு அறிஞரே அதனை எழுதியிருந்தார். சிந்தாமணிப் பதிப்பைக் கண்டு அவர் மிகவும் இன்புற்றதாகவும், சிலப்பதிகாரம் முதலிய மற்ற நான்கு காப்பியங்களையும் நான் பதிப்பிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். அந்தக் கடிதத்திலிருந்து அவருடைய தமிழன்பும் வணக்கமும் புலப்பட்டன. ‘எம்முடைய புன்றமிழை உம்முடைய தயையினாலேயே வாசித்துக்கொண்டால் ஒரு காகிதம் எமக்கு மறுபடி யனுப்பினால் மிகவும் சந்தோடமா யிருப்போம். சுவாமியுடைய கிருபையெல்லாமும் வருகவென்று உங்கள் Colleague and servant ஆயிருக்கிறோம்’ என்று அக்கடிதத்தை முடித்திருந்தார். அவர் கடல் கடந்த நாட்டில் இருந்தாலும் ‘உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்’ என்றபடி எங்கள் உணர்ச்சியினால் நாங்கள் அன்பர்களானோம். பாரிஸ் நகரத்தில் உள்ள புத்தகசாலையில் சிலப்பதிகாரப் பிரதி கிடைக்குமோ என்று அவருக்குக் கடிதம் எழுதினேன். உடனே அவர் விடை எழுதினார். 1891-ஆம் வருஷம் மே மாதம் 7-ஆம் தேதி அவர் எழுதிய அக்கடிதத்தில், ‘Bibliothique Nationale’ என்கிற பெரிய புத்தகசாலையிலிருக்கின்ற ஓராயிரம் தமிழ்க் கையெழுத்துப் புத்தகங்களெமக்கு நன்றாய்த் தெரியும். அவைகளின் List or Catalogue பண்ணினோமானால் அவற்றுள் சிலப்பதிகாரம் இல்லை. பழைய புத்தகங்களோவென்றால் அந்தச் சாலையிலே மணிமேகலை ஒரு கையெழுத்துப் பிரதி உண்டு, ஆனால் நாம் போன மாசம் எழுதிய காகிதத்திற் சொன்னபடி அந்தப் பிரதியில் பற்பல கவியும் வார்த்தையும் எழுதாமல் விட்டிருக்கின்றது. அந்தப் பிரதியிலும் மூலமாத்திரமுரையின்றி வருகிறது. அது ஓலைப் பிரதி யாகும். நாம் அதைக் கடுதாசியி லெழுதினோம், நங்கட்சிறு புத்தக |